தற்போதைய செய்திகள்

மத்திய அரசின் நடவடிக்கையை பொறுத்து:”காவிரி விவகாரத்தில் நாம் நல்ல முடிவு எடுப்போம்” சட்டசபையில் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்….

சென்னை,
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பொறுத்து காவேரி விவகாரத்தில் நாம் எல்லாம் கூடி பேசி நல்ல முடிவு எடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
என்ன நடவடிக்கை
சட்டசபையில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அரசு எடுத்துவரும் நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறியதாவது:

காவேரிப் பிரச்சினையில், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்பது, காவேரி நடுவர் மன்றத்தினுடைய பிரச்சினையை, தாவாவை, நீர்ப் பங்கீட்டு முறையைப் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட காவேரி நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பில் விளக்கமாகவும், விவரமாகவும் ‘காவேரி மேலாண்மை வாரியம்’ என்ற வார்த்தையும், ‘காவேரி நீர் முறைப்படுத்தும் குழு’ என்ற அந்தச் சொற்றொடரும் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
இன்னும் 4 நாட்கள்
ஆகவே, மத்திய அரசு காவேரி நடுவர் மன்றத்தில் சொல்லப்பட்ட அந்த காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நநிநீர் முறைப்படுத்தும் குழுவையும் 6 வார காலத்திற்குள் அமைத்திட வேண்டுமென்ற உறுதியான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னதுபோல, இன்னும் 4, 5 நாட்கள் இருக்கின்றன. ஆகவே, அதை தினமும் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு நினைவூட்டலாகச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.
முடங்கியது
நீங்கள் எந்தளவுக்கு அந்தப் பிரச்சினையில் அழுத்தம் தருகிறீர்களோ, அதற்கும் மேலாக எங்களுடைய அழுத்தம் நாடாளுமன்றத்தில் தினமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 13 நாட்களாக சபையே நடக்காதவாறு அங்கே இந்தப் பிரச்சினையை எடுத்துச்சென்று, நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தளவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறார்களோ அந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கின்ற காரணத்தினால்தான் நாடாளுமன்றமே 13 தினங்களாக முடங்கிப் போயிருக்கிறதென்ற சரித்திரத்தை தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
விவரம் வரவில்லை
இந்த அளவிற்கு நாம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் சட்டத்தின் மூலமாக, நீதிமன்றத்தின் மூலமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மத்திய அரசு செயல்படுத்துகிறதா என்ற நிலை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. செய்தித் தாள்களில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கருத்துகள் எந்தளவிற்கு அவர் என்ன நினைத்துச் சொன்னார் என்ற விவரம் இன்னும் அரசுக்கு வந்து சேரவில்லை.
எந்த மாதிரியான சூழ்நிலை
முழு விவரமும் மத்திய நீர்வளத் துறையின் செயலாளர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். முழு விவரமும் தெரிந்து அதனை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பது எங்களுடைய கடமை என்றே நான் கருதுகிறேன். பொறுத்திருப்போம். அது எந்த நிலையை அடைகின்றது என்ற நிலையைத் தீர ஆராய்ந்து, மீண்டும் அனைவரும் கூடிப்பேசி, எந்த மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்தினால் காவேரி மேலாண்மை வாரியமும், காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவும் மத்திய அரசு அமைக்கும் என்ற சூழல் ஏற்படும்; அதற்கு எந்தமாதிரி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று நாமெல்லாம் கூடிப்பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.




Leave a Reply