தற்போதைய செய்திகள்

மதுரை நகரில் கிறிஸ்துவ ஆலயங்கள் மீது தாக்குதல் எதிரொலி:மத அமைதியை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை…..

சென்னை,

‘‘தமிழகத்தில் மத அமைதியை சீர்குலைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்’’ முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் பேசுகையில் எச்சரிக்கை விடுத்தார்.

தி.மு.க. வலியுறுத்தல்

சட்டசபையில் நேற்று ஆஸ்டின் (தி.மு.க.) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசுகையில், ‘‘மதுரை மாவட்டம், ஆனையூர், கூடல் நகர், சிக்கந்தர்சாவடி உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன. இதுபோன்ற தாக்குதல் நடத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதே பிரச்னையை காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரின்ஸ் பேசுகையில், ‘அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

மிரட்டல் விடுத்தனர்
இதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:

மதுரை மாநகரில் அன்பு நகர், செல்லையா நகர் மற்றும் ஆணையூர் ஆகிய இடங்களில் கடந்த 11.3.2018 அன்று, ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஜெப வீடுகளில் ஜெபம் நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத சில நபர்கள் அங்கு சென்று ஜெபம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை நடத்திக் கொண்டிருந்த போதகர்கள் மற்றும் கலந்து கொண்டிருந்த கிறிஸ்தவ மக்களை தகாத வார்த்தைகளால் பேசி ஜெபம் நடத்தக்கூடாதென எச்சரித்து மிரட்டியுள்ளனர்.

அடையாளம் தெரியாதவர்கள்

இதே போன்று, அன்றைய தினமே மதுரை மாவட்டத்தில் சிக்கந்தர் சாவடி, மந்தையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு ஜெபக்கூடத்தில் ஜெபம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சிலரை கைகளால் தாக்கி அங்கிருந்த சில பொருட்களை சேதப்படுத்தியதுடன், அவர்களிடமிருந்த பைபிளைப் பிடுங்கி, தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்துமுன்னணி தலைவர் கைது

இது தொடர்பாக, மதுரைநகர் கூடல் புதூர் காவல் நிலையத்தில் இமானுவேல், ஸ்டனீஸ் லாஸ் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் தனித்தனியே அளித்த புகார்களின் பேரில் மூன்று வழக்குகளும், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் ரவி ஜேக்கப் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் விசாரணையின் போது, அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தினேஷ் மற்றும் சதீஷ்பாபு ஆகிய இருவரை 16.3.2018 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கூடல் புதூர் காவல் நிலைய வழக்குகள் தொடர்பாக இந்து முன்னணி ஆரப்பாளையம் பகுதித் தலைவர் அரவிந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அனுமதியின்றி கூட்டங்கள்

இதற்கிடையே, இந்து முன்னணி ஆணையூர் பகுதி பொறுப்பாளர் சதீஷ்பாபு என்பவர் கூடல் புதூர் காவல் நிலையத்தில் 11.3.2018 அன்று அளித்துள்ள புகாரில், அனுமதியின்றி ஜெபக்கூடங்கள் செயல்படுவதாகவும், அந்த கூடங்களில் மத்திய அரசுக்கு எதிராகவும், கிறிஸ்தவத்தை பரப்புவதற்காகவும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்படுவதாகவும், எனவே இதுபோன்று மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஜெபக்கூடங்கள் மற்றும் போதகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க நான் உத்தரவிட்டதன் பேரில், காவல் துறையினர் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேலும் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் பார்த்துக் கொண்டனர். மத அமைதியை குலைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave a Reply