BREAKING NEWS

மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கீழணையில் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்.


தஞ்சையில் உள்ள கீழணையின் மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அந்த அணையின் பாலத்தில் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கீழணை

திருச்சி, முக்கொம்பு மேலணையை கட்டிய ஆர்தர் காட்டன், 1840-ம் ஆண்டில் அணைக்கரையில் கீழணையைக் கட்டினார். 1.32 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழும் இந்த அணை, முறையான பராமரிப்பு இல்லாமல் கடந்த 2002ம் ஆண்டு வலுவிழந்தது. அதன்பின் 16 ஆண்டுகளாகியும் அதன் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க, தமிழக ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

பாதுகாப்பு

கீழணை வலுவிழந்ததற்கான காரணங்களை பேராசிரியர் மோகனகிருஷ்ணன் ஆய்வு செய்தார். கீழணை அமைந்துள்ள பாலம் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என்பதைக் கண்டறிந்த அவர், அப்பாலத்தில் கனரக ஊர்திகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால், அப்பரிந்துரையை அப்போதைய அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து கனரக ஊர்திகள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், 2009-ம் ஆண்டில் பாலத்தின் மதகில் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பாலத்தை மீண்டும் ஆய்வு செய்த மோகனகிருஷ்ணன் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்த பரிந்துரைத்தார்.

போக்குவரத்து தடை

அதன்படி அணைக்கரை பாலத்தில் சில ஆண்டுகளுக்கு கனரக ஊர்திகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் அணை மீண்டும் பாதிக்கப்பட்டது. கீழணையில் 14 நீர்வழி மதகுகள் சேதமடைந்துள்ளன.

கீழணையில் தொடர்ந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் அதற்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம் என்பது தான் அப்பகுதியினர் கருதுகின்றனர். கீழணையின் வலிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply