BREAKING NEWS

மண் பாத்திரங்கள் பக்கம் திரும்பிய மக்கள்.

முன்பெல்லாம் களிமண் பாண்டங்களைப் பயன்படுத்தி, விறகு அடுப்பில் சமைத்த உணவு தனிச் சுவை கொண்டிருந்தது மட்டுமல்லாமல், ஆரோக்கிய வாழ்வுக்கும் வழிவகுத்தது. தற்போது பொதுமக்களின் கவனம் மீண்டும் மண் பாத்திரங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

ஏற்றுமதி

இது குறித்து படிப்படியாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் நவீன மாடல் மண் பாண்டத் தொழிலில் ஈடுபட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நவீன யுகத்திற்கு ஏற்ற மண் கலயங்களை உற்பத்தி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எடுத்து வரக்கூடிய தொழில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.

இந்தியாவில் உத்தரபிரதேசம், புதுடெல்லி, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இத்தகைய களிமண்ணால் ஆன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அமெரிக்கா, நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், கனடா உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஏற்றுமதி காரணமாக கணிசமான அளவுக்கு அந்நிய செலாவணியும் ஈட்டுகிறது.

விற்பனை

அதனால் இத்தொழிலுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.இயந்திரங்களால் தயாரிக்கப்பட்டு நெருப்பில் சுடப்பட்டு மண் பாத்திரங்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. அலங்காரப் பொருள்கள், கலைப் பொருள்களைப் போலவே, மண்ணால் ஆன சமையலறை சாதனங்களுக்கான விற்பனையகங்கள் துவக்கப்பட்டு வணிகம் நடைபெற்று வருகிறது.

சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கு பரிசு பொருட்களாக வழங்குவதற்காகவும் அதனை பலர் வாங்கி செல்லக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.டெரகோட்டா கோப்பைகள், சாப்பாட்டு தட்டுகள், குழாய் வசதியுடன் கூடிய தண்ணீர் பானை, பாட்டில் வடிவில் குடிநீர் குடுவைகள் மட்டுமல்லாமல், ரைஸ் குக்கர், இட்லி குக்கர், புட்டு மேக்கர், வாணலி, கண்ணாடி மூடி போட்ட ப்ரை பான், தோசை இடும் பான்கள் என பல்வேறு விதமான சமையல் பாண்டங்களுக்கு வரவேற்பு பெருகி வருகிறது.

விலை

இதில் ரைஸ் குக்கர், தோசை சட்டி உள்ளிட்டவற்றுக்கு எவர்சில்வர் கைபிடி இருப்பதால், அவற்றைக் கையாள்வதில்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. இவற்றின் விலை குறைந்தபட்சம் ரூ.300லிருந்து உள்ளது. இன்றைக்கு சந்தையில் பரவலாக உள்ள உலோக வீட்டு உபயோகப் பொருட்களின் விலையைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்பதால் களிமண்ணால் ஆன வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வரவேற்பு உள்ளது.

இதையடுத்து, இத்தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.இதுகுறித்து ஆம்பூரைச் சேர்ந்த கே. கோவிந்தராஜ் கூறியது: அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களும் டெரகோட்டாவில் தயாரிக்கப்படுகிறது. களிமண்ணால் செய்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதனால் இத்தொழிலை துவங்க பலரும் ஆர்வத்துடன் முன்வருகின்றனர். மக்களும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதால் இத்தொழில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அவர் கூறினார்.




Leave a Reply