BREAKING NEWS

மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால்  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தென்மேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் வடதமிழகம், தென்தமிழக கடலோர பகுதிகளில் பலமான காற்று வீசும். எனவே, அப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் பருவமழை பொழிவு இல்லை. வெப்பச்சலனம் காரணமாக, சில மாவட்டங்களில் மழை பெய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும். லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.

மீனவர்களுக்கு..

மேற்கு திசையிலிருந்து மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் பலமாக வீசக்கூடும். அதேபோல, தென்மேற்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியில் பலமான காற்று வீசும். எனவே, மீனவர்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மழை விவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் 3 செ.மீ., ஆலங்குடி, வால்பாறை பி.டி.ஓ.வில் தலா 2 செ.மீ., கீரனுார், கடலுார், பன்ருட்டி, பெருங்கலுார், தேவாலா, சின்னகல்லாரில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




Leave a Reply