BREAKING NEWS

மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக மாற்ற தி.மு.க.வினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக மாற்றும் வகையில், தி.மு.க.வினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திண்ணைப்பிரசாரம்

பொதுமக்களிடமிருந்து வெளிப்படும் ஆரவாரமான ஆதரவும் அசைக்கமுடியாத தீர்மானமும் நமக்கு நல்ல நம்பிக்கை ஊட்டுகிறது. பொதுக்கூட்டம், வேன் பிரச்சாரம் இவையல்லாம் தேர்தலில் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள்தான் எனினும், நான் மிகவும் விரும்புவது திண்ணைப் பிரச்சாரத்தைத்தான். பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் நேரடியான உரையாடல். மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை, அவர்கள் உடல்மொழியிலும் பார்க்க முடியும்.

தி.மு.க. எப்போதும் ஜனநாயக வழியில் செயல்படும் இயக்கம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. அவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள். அதேநேரத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அடிப்படை வசதிகளைக்கூட செய்து தர முடியாத ஓர் ஆட்சி, தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம் எதுவும் சரியாக இல்லை.

தொண்டர்களுக்கு உத்தரவு

திண்ணைப் பிரச்சாரத்தின்போது சந்தித்த மக்கள், தாங்கள் படும் துன்பங்களை சொன்னார்கள். ததமிழ்நாட்டை மீட்பதற்கு தி.மு.க.தான் ஒரே நம்பிக்கை என்பதை வெளிப்படுத்தினார்கள். அனைத்துத்தரப்பு மக்களும் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இடைத்தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியின் அமைச்சரவைப் பட்டாளம் முழுவீச்சிலான அதிகார துஷ்பிரயோகத்துடனும் செயல்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல நேரங்களில் ஒருதலைப்பட்சமாக இருந்தாலும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், இன்னும் அந்த அமைப்பின் மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

தேர்தல் களத்தில் பொதுமக்கள் மீதே அதிக நம்பிக்கை வைத்திட வேண்டும். மக்களின் நம்பிக்கையை, அவர்கள் தருகின்ற ஆதரவை வாக்குகளாக மாற்றுகின்ற வகையில் கழகத்தினரின் பணி சீராகவும் சிறப்பாகவும் அமையவேண்டும்.

வீடு வீடாகச் செல்லுங்கள். ஒவ்வொரு வாக்காளராகச் சந்தியுங்கள். நமது அணிக்கு அவர்களின் வாக்குகளை உறுதி செய்யுங்கள். நாடாளுமன்ற தேர்தலின் தோழமை உணர்வு இடைத்தேர்தல் களத்திலும் தொடர்ந்து நீடித்து, வெற்றியினைப் பெற்றிடவேண்டும்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *