BREAKING NEWS

மகாத்மா மெய்யான மனிதன்…

மகாத்மா காந்தி பற்றிய அரிய தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவரது பொதுவாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தபடியே இருந்திருக்கிறது. அப்படி இந்த மாதம் முழுவதும் இங்கே காந்தி பற்றிய சுவாரசியங்களையும் பிரமிப்புகளையும் இனி நாள்தோறும் அறிந்து கொள்ளலாம்…

‘இந்த ஆள் இருக்கிறவரை இந்துக்களை உருப்படவே விடமாட்டார், முஸ்லிம்களுக்கு மட்டுமே பயன்படுவார்’ – என்று இந்துத்துவவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆனால்,  அப்படி விமர்சித்தவர்களைக் காட்டிலும், இந்துசமயத்தை நுணுக்கமாக  அறிந்தவர் அவர்தான்! அதன் ஆழ அகலங்களை விலாவாரியாகப்  புரிந்துகொண்டிருந்தார்.

மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி என்பதுமாதிரி இருந்தது, காந்தியின் மீதான ஜின்னாவின் தாக்குதல். இந்துத் தீவிரவாதி – என்கிற வார்த்தையை மட்டும்தான் பயன்படுத்தவில்லையே தவிர மற்ற எல்லா வார்த்தைகளையும் ஜின்னா பயன்படுத்தினார். ‘தந்திரக்கார நரி’ என்பது காந்தி குறித்த அவரது உறுதியான கருத்து. காந்தி நாடகமாடுகிறார் – என்று அதற்குப் பொருள்.

காந்தி குறித்த இந்த முன்னுக்குப் பின் முரணான அபிப்பிராயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த புண்ணியவான், நாதுராம் கோட்சே. அவன் மட்டும் இல்லையென்றால், காந்தியைப் புரிந்து கொள்வதில் இன்றளவும் குழப்பம் நீடித்திருக்கும். Point blank range-ல் காந்தியைத் துளைத்த கோட்சேவின் தோட்டாக்கள் தான், காந்தி மகாத்மாவோ இல்லையோ, மெய்யான மனிதன் என்பதை நிரூபித்தன.

உண்மையில், “காந்தியை மகாத்மா என்றழைத்த ‘முதல் பிரமுகர்’ தாகூர்” என்று சொல்வதுதான் சரி. தாகூருக்குப் பல ஆண்டுகள் முன்பே, பழங்குடியினத்தவரான கோண்டு இன மக்கள், காந்தியை மகாத்மா என்றழைக்கத் தொடங்கிவிட்டனர். (காந்தியைக் கொண்டாடிய அதே கோண்டு இன மக்கள்தான், சுதந்திர இந்தியாவில் நக்சலைட்டுகளைக் கொண்டாடினர்…  அது பிற்காலத்திய வரலாறு.)

காந்தியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்த மாதம், ஆகஸ்ட். குறிப்பாக, அவரது பொதுவாழ்க்கையின் தொடக்கப்புள்ளியாக அமைந்த நேட்டால் காங்கிரஸ் குறித்துச் சொல்லியாக வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் நிற அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டதை எதிர்த்துப் போராட நேட்டால் காங்கிரஸை காந்தி தொடங்கியது,  1884 ஆகஸ்ட் மாதத்தில்தான்!

காந்தியின் வரலாற்றுப் பிரசித்தி மிக்க லண்டன் பயணம், 1931 ஆகஸ்ட் 29-ம் தேதிதான் தொடங்கியது. கையில் ஒரு ஆட்டுக்குட்டியுடன் கப்பலில் ஏறினார் அவர். அது, இந்திய அரசியல் தொடர்பான வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பயணம். உலகின் உன்னதமான மேய்ப்பனை இதயப்பூர்வமாக நேசித்த ஆங்கிலேயர்களைக் கவரும் திட்டத்துடனோ என்னவோ, வெள்ளாட்டுக்குட்டியுடன் கப்பலேறினார் அவர்.

1933 ஜூலை 31-ல் தொடங்கிய சிவில் ஒத்துழையாமை அறப்போருக்காக, அதற்கு அடுத்த நாள், ஆகஸ்ட் முதல் தேதி, காந்தி கைது செய்யப்பட்டார். 23-ம் தேதிவரை சிறைவாசம் நீண்டது.

1942 ஆகஸ்ட், காந்தி என்கிற மென்மையான மனிதனைக் கொதித்து எழ வைத்த மாதம். பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து வெளியேறக் கோரும் ‘QUIT INDIA’ தீர்மானம் ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பை காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

‘QUIT INDIA’ என்கிற வலுவான சொற்றொடர் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பே காந்திக்குள் ஊடுருவிவிட்டது என்றாலும், சரியான தருணத்துக்காகக்  காத்திருந்தார். மும்பை காங்கிரஸில்தான் அதை அறிவித்தார். ஆகஸ்ட் 8-ம் தேதி நள்ளிரவில், அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி மெலிதான குரலில்  கர்ஜித்தபோது, அவருக்கு வயது 72. அது, ஒரு கிழட்டுச் சிங்கத்தின் கர்ஜனை.

பொதுவாக காந்தியின் குரலில் ஆவேசத்தைக் காணமுடியாது. சவால் விடுகிறேன் – என்பதைப் போன்ற வார்த்தைகளையோ, மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடுவதைப் போன்ற உடல் அசைவுகளையோ, மேடைப் பேச்சுக்களிலோ தனிப்பட்ட உரையாடல்களிலோ அவர் பயன்படுத்தியதில்லை. பல்லாயிரக்கணக்கில், பல லட்சக் கணக்கில் மக்கள் கூடிய கூட்டங்களில் பேசும்போதுகூட, ஒரு கிராமத்து விவசாயியைப் போலத்தான் பேசினார் அவர். (டெல்லியில் ராஜ்காட் அருகிலேயே அமைந்திருக்கிற காந்தி மியூசியத்துக்குச் செல்பவர்கள், அவரது ஒரிஜினல் உரையைக் கேட்கிற வசதி இருக்கிறது.)

அந்த காந்திதான் 1942 ஆகஸ்ட் 8 நள்ளிரவில் ‘DO OR DIE’ என்று கர்ஜித்தார். செய் அல்லது செத்துமடி – என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிற அளவுக்குப் போய்விட்டது, அவரது அறச்சீற்றம். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் இழுத்தடித்த பிரிட்டிஷ் அரசின் மோசடிகளால், காந்தி எந்த அளவுக்கு நொந்துபோயிருந்தார் என்பதற்கு அந்த நள்ளிரவு உரை மிகச் சரியான சான்று. அவரது வழக்கமான உரைகளிலிருந்து அது முழுக்க முழுக்க வேறுபட்டிருந்தது.  ‘இன்றே இந்த நிமிடமே எங்கள் தாயகத்தை விட்டு வெளியேறு’ என்று ஆங்கிலேயர்களை வலியுறுத்தினார். முடிந்தால் விடிவதற்குள் சுதந்திரம் கொடு – என்றார்.

‘QUIT INDIA’ தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாள், ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் காந்தி கைது செய்யப்பட்டார். ஆனால், எரவாடா சிறைக்கு அனுப்பப்படாமல், ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். அது, ஒரு நீண்ட சிறைவாசம். சுமார் 2 ஆண்டுகள். சிறைக்குப் போன ஒரே வாரத்தில், காந்தியை அவரது நிழல் போலவே தொடர்ந்த அவரது உதவியாளர் மகாதேவ தேசாய் சிறைக்குள்ளேயே இறந்தார். ஆகஸ்ட் 15-ம் தேதி, சிறைக்குள்ளேயே தனது நிழலின் சிதைக்குத் தீ வைத்துவிட்டு, கொளுந்துவிட்டெரியும் நெருப்பைக் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் காந்தி.

ஆகஸ்ட் மாதம் காந்தியின் குறிப்பிடத்தக்க மாதம் என்றாலும், 1947 ஆகஸ்ட் மிக மிகக் குறிப்பிடத்தக்கது. தனது 77 வயதில், அந்த மனிதர் பேசினார், பேசினார், பேசிக் கொண்டே இருந்தார். எந்த நாட்டின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தாரோ, அந்த நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பேசினார். இந்தியா இரண்டாக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பேசினார்.

1947 ஆகஸ்டில் காந்தி உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையும், எதிர்காலத்துக்கான எச்சரிக்கை மணி. மழை வருவதற்கு முன் இடி இடிப்பது  மாதிரி, 1947 ஜூலையிலேயே தனித்து ஒலித்தது அந்த மனிதரின் குரல்.  இந்திய தேசியக் கொடியை வணங்க மறுப்பது ஏன் – என்பதில் தொடங்கி, பசுவதை தடை தொடர்பான வெளிப்படையான விமர்சனம் வரை, ஒவ்வொன்றிலும் காந்தி காந்தியாகவே இருந்தார்.

– புகழேந்தி தங்கராஜ்
Leave a Reply