தற்போதைய செய்திகள்

மகளிர் பாதுகாப்பில் நாட்டிலேயே முதலிடம்-காவலர்களால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்……

சென்னை,
மகளிர் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவலர்களால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை, ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா மற்றும் இந்திய குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் பதக்கங்களை வழங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-
அமைதிப் பூங்கா
‘‘ஒளிபடைத்த கண்களோடும், உறுதிகொண்ட நெஞ்சங்களோடும், வலிமை கொண்ட மனங்களோடும், இங்கே கூடியிருக்கின்ற உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.‘‘உறுப்பு அமைந்து ஊறுஅஞ்சா வெல்படைவேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை’’ இந்த திருக்குறளின் பொருள் ‘‘இடையூறுகளுக்கு அஞ்சாத படைபலம்தான் அரசனுடைய செல்வங்களுள் சிறந்தது’’ என்பதாகும். இதற்கு ஏற்ப தமிழக காவல்துறை நாட்டின் பக்க பலமாக உள்ளது. காவல் துறையினரின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாட்டால், இன்று தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
பெண்கள் பாதுகாப்பு
இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த இடங்களில் முதன்மையான இடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மக்கள் இரவு நிம்மதியாக உறங்கி காலை நிம்மதியாக எழுகிறார்கள் என்றால், இரவு முழுவதும் கண்விழித்து காவல் காக்கும் காவலர்களால்தான் அது சாத்தியமாகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.
தமிழ்நாடு காவல் துறையில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் 29 பேர் பயிற்சி முடித்ததையொட்டி நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதிலும், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை
ஆகிய துறைகளில் தீரச் செயல், தகைசால் பணி, மெச்சத்தக்க பணி, பொது சேவைக்கான சீர்மிகு சிறப்புப் பணி,
சிறந்த நற்பணி, சிறந்த புலனாய்வு, சிறந்த பயிற்சி, விரல் ரேகை அறிவியல் சீர்மிகு பணி, தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணி ஆகியவற்றிற்கான இந்திய குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை 203 நபர்களுக்கு வழங்கியதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெருமிதம் கொள்கிறேன்.
நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
சட்டத்தின் ஆட்சி என்பதும், சட்டத்தின் முன் எல்லோரும் சமமாக நடத்தப்படுவது என்பதும், ஒரு ஜனநாயக நாட்டின் அடித்தளமாகும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பதில் நம் காவல் துறையினர் கண்டிப்பாக இருப்பவர்கள்.
பயங்கரவாத இயக்கங்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடா வண்ணம் முன்எச்சரிக்கை உணர்வுடன் பாதுகாத்து வருகின்றனர். நீண்ட கடற்கரையை கொண்ட, நமது மாநிலத்தில் புதிதாத காவல் நிலையங்களை அதைத்து பாதுகாத்து வருகின்றனர்.
அதிகரித்து வரும் போக்குவரத்த நெரிசலை குறைக்க விஞ்ஞான ரீதியில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். காவல் துறையை மேம்படுத்த 2010-11 ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரத்து 961 கோடியே 6 லட்சமாக இருந்த காவல் துறைக்கான நிதி ஒதுக்கீடு, படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரத்து 877 கோடியே 58 லட்சமாக உள்ளது.
திறன் மேம்பாடு
இதே போன்று, நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், கடந்த 2011 முதல் 2017 வரை 722 கோடியே 19 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நவீன ஆயுதங்கள், உபகரணங்கள், வாகனங்கள், தற்காப்பு கவசங்கள் போன்றவை அளிக்கப்பட்டு, காவல் துறையினரின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
காவல் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், 24,023 காவலர்களும், 1,034 உதவி ஆய்வாளர்களும்,
99 துணை கண்காணிப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இத்துடன், 9,140 நபர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,
பின்னர் அவர்களுள் 8 ஆயிரத்து 569 நபர்கள் காவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஆயிரத்து 480 காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும், 5,538 காவலர்களை தேர்ந்தெடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை காவலர் முதல் காவல் துறை இயக்குநர் வரையிலான பல்வேறு பதவிகளில் மொத்தம் 58 ஆயிரத்து 593 நபர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில், இதுவரையில் 747 காவல் நிலையங்களில் 4,482 கண்காணிப்பு கேமராக்களும், அரசு மற்றும் தனியார் இடங்களில் ஒரு லட்சத்து
23 ஆயிரத்து 313 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
சொந்த வீடு திட்டம்
காவலர்களின் சொந்தவீட்டு கனவை நனவாக்கும் வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு “உங்கள் சொந்த இல்லம்”” திட்டத்தினை அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் 459 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 2 ஆயிரத்து 673 வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற 61வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டியில் தமிழ்நாடு காவல் துறை 18 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்கள் உட்பட 7 கோப்பைகள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று, நாட்டிலேயே முதலாவதாக இருந்து வருகிறது.
பதக்கபடி உயர்வு
காவல் துறையினரின் குறைகளைக் களைவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவ்வரசு, அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் சிறப்புப் பணி அண்ணா பதக்கத்துக்கான பணப்பலனை காவலர் முதல் தலைமைக் காவலருக்கு
4 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் ஆகவும், உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளருக்கு
6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் ஆகவும், காவல் துணை கண்காணிப்பாளருக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் ஆகவும், காவலர் பதக்கத்துக்கான மாதாந்திர பதக்கப்படி 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் ஆகவும், வீர தீரப்பணி காவல் பதக்கத்துக்கான மாதாந்திர பதக்கப்படி 300 ரூபாயிலிருந்து 900 ரூபாய் ஆகவும் உயர்த்தி உத்தரவிட்டது.
வாழ்த்து
சீருடைப் பணியாளர்களின் தியாகத்தையும், கடமை உணர்வையும் பாராட்டி, கௌரவிக்கும் வகையில் இப்பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகள், பதக்கங்களைப் பெறுவோர் மேலும் சிறப்பாக பணிபுரிய ஊக்கமளிப்பதுடன், பிற பணியாளர்களுக்கும் நற்பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தையும் அளிக்கிறது.
இந்த விழாவில் சிறப்பாக பயிற்சி முடித்து மக்களுக்கு சேவையாற்ற உள்ள இளம் காவல் துணை கண்காணிப்பாளர்கள்,
தங்கள் பணிக் காலத்தில் சிறப்பாக பணியாற்றி பொது மக்களுக்கு நற்சேவை செய்து, அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்று, பல்வேறு பதவி உயர்வுகள் பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
—–

‘‘லட்சியத்தை அடைய, நதியை போல் ஓடுங்கள்’’ – முதல்வர் கூறிய குட்டிக் கதை (பாக்ஸ்)

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு உங்கள் அனைவரின் நலன் காப்பதில் எப்போதும் போல தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. நாட்டின் நலன் காப்பதில் நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதனை நீங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.
இலக்கு எனக் கூறும்போது, எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகின்றது.
ஒரு குருவின் மூலம் தத்துவங்களை கற்றுவந்த ஒரு சீடரின் நண்பர், ‘உன் குருவின் மூலம் தத்துவங்கள் முழுவதையும் கற்றுக் கொண்டாயா ?’ என்று கேட்டார். ‘தத்துவங்களை அவசரப்பட்டு கற்க முடியாது, கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கற்க முடியும்’ என்றார் சீடர்.
‘உன் குருவுக்கு வயதாகி விட்டது, அவருக்குப் பின் உனக்கு யார் தத்துவங்களை கற்றுத் தருவது ?’ என்று நண்பர் கேட்டார். நண்பரின் கேள்வி நியாயமானதாகப் படவே, சீடர், அந்த சந்தேகத்தை குருவிடமே கேட்டார். ‘குருவே, நீங்கள் இல்லாவிட்டால் தத்துவங்களை எனக்கு யார் சொல்லித் தருவார்கள்.?’ என்ற கேள்விக்கு, ‘குறிப்பிட்ட இடத்திலிருந்து புறப்படும் நதிகளுக்கு யார் வழிகாட்டி ?’ என்று குரு எதிர் கேள்வி கேட்டார். ‘நீரும், அதன் வேகமும் தான் அதன் போக்கை தீர்மானிக்கிறது’ என்று சீடர் கூறினார். ‘சரியாகச் சொன்னாய், பாறைகள், காடுகள் என்று எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும் நதி திகைத்துப் போய் நின்று விடுகிறதா ?’ என்று குரு கேட்டார்.
‘நிற்பதில்லை குருவே’ என்றார் சீடர்.
‘எப்படி அந்த நதியில் ஓடும் நீர், தன் லட்சியமான முகத்துவாரத்தை அடைகின்றது என்பதை யோசித்தாயா?’ என்றார் குரு. சீடருக்கு குழப்பமாக இருந்தது. ‘பெரும் தடைகள் வந்தால் சிறிய நீரோட்டங்கள் தேங்கி நின்று விடுகின்றன. ஆனால், உறுதியான கொள்கையும், ஆர்வமும் இருந்தால், வெள்ளம் போல தடைகளை வென்று தன் இலக்கை அடையலாம்’ என்று விளக்கம் கொடுத்தார் குரு.
சீடரின் சந்தேகமும், குழப்பமும் தீர்ந்தது. உண்மை, நேர்மை, நடுநிலைமை, ஒழுக்கம் தவறாமல் ஒரு போர்படை வீரனைப்போல், எல்லையைக் காக்கும் வீரனைப்போல திகழ வேண்டும். அதுதான் தாய்நாட்டிற்கும், தாய் மக்களுக்கும் செய்யும் தலையாய கடமை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Leave a Reply