BREAKING NEWS

மகளிருக்கு ரூ.150 கோடி வங்கி கடன் உதவி ., ரூ.662 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கி கடன் உதவி உள்ளிட்ட ரூ.662 கோடி திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.550.50 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில், ரூ.112.62 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் 525 நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி ஆணை வழங்குகிறார்.ஊரக வளர்ச்சித்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் (ம) கழிவுநீரகற்று வாரியத்தில் 279 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கி கடன் உதவி, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.58 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டப் பணியாளர்களுக்கு பணி ஆணை இந்த அரசு கிராமப்புறங்களில் தொழில் மேம்பாடு, நிதி சேவை மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் ஊரக மக்கள் வாழ்வில் வளம் மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்திட தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் என்ற புதிய திட்டத்தினை உலக வங்கி உதவியுடன் செயல்படுத்த உள்ளது.இத்திட்டம் தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில், 3,994 ஊராட்சிகளில் செயல்பட உள்ளது.

இத்திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரையும் தொழில் முனைவோராக்க துணை புரியும்.தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 525 நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி ஆணைகள் வழங்கப்படுகிறது. இதில் 18 மாவட்ட செயல் அலுவலர்கள், 29 இளம் வல்லுநர்கள், 98 செயல் அலுவலர்கள், 120 வட்டார அணித் தலைவர்கள் மற்றும் 260 திட்ட செயலர்கள் அடங்குவர்.

தற்போது பணி ஆணை பெறுபவர்களில் இளம் வல்லுநர்கள் தவிர ஏனையோர் அனைவரும் 2005 முதல் 2017 வரை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட புது வாழ்வுத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர்.ரூ. 6.81 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் 101 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சீரோடும், சிறப்போடும் செயல்பட்டு வருகிறது.2011-12 முதல் 2019 அக்டோபர் 15 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 57,876 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டு, பல்வேறு தொழில்கள் இன்றைக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2018-19 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 11,449 கோடி ரூபாய் வழங்கி சாதனை மேற்கொள்ளப்பட்டது.2019-20ஆம் நிதியாண்டில் 12,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 5,247 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 150 கோடி ரூபாய் அளவில் வங்கிக் கடன் 31.10.2019 அன்று வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம், அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பங்கேற்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *