BREAKING NEWS

மகனுக்கு ஆசையாக பரிசளிக்க வாங்கிய செல்போன் பழுது அலட்சியம் காட்டிய ஷோரூம் முன் தீயிட்டு எரித்த தந்தை

மகன் பிளஸ்டூ தேர்ச்சி பெற்றதால் பரிசளிக்க ஆசையாக வாங்கிய செல்போன் வேலை செய்யாததால் அவர் வாங்கிய ஷோரூமில் கேட்க அவர்கள் அலட்சியமாக மறுத்ததால் மனம் நொந்துப்போன தந்தை செல்போனை ஷோரூம் முன் தீயிட்டு எரித்துவிட்டுச் சென்றார்.

பிளஸ் டூ தேர்ச்சி

தாம்பரம் அடுத்த கடப்பேரியை சேர்ந்தவர் தலைமலை(47). சாதாரண நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் பிளஸ்டூ படித்துவந்தார்.

மகன் பிளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்வானால் அடுத்து அவர் கல்லூரி செல்லும் தனது மகனுக்கு அவர் ஆசைப்பட்டப்படி செல்போன் ஒன்றை பரிசளிக்க விரும்பியுள்ளார்.

செல்போன் பரிசளிப்பு

இதற்காக கடந்த 2 மாதம் முன் தனது சேமிப்பிலிருந்து ரூ.14 ஆயிரம் செலவழித்து ஒரு செல்போனை குரோம்பேட்டையிலுள்ள ஒரு கடையிலிருந்து வாங்கியுள்ளார்.

அந்த செல்போனை மகனுக்கு தெரியாமல் வீட்டில் வைத்திருந்த அவர் பிளஸ்டூ ரிசல்ட் வந்த அன்று மகனுக்கு சர்ப்ரைசாக செல்போனை பரிசளித்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.

செல்போன் பழுது

ஆனால் செல்போனில் சிம்கார்டை போட்ட அவரது மகனுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. செல்போன் வேலை செய்யவில்லை. இதையடுத்து செல்போனை எடுத்துக்கொண்டு ஷோரூமுக்கு வந்து கொடுத்துள்ளார் தலைமலை. ஆனால் ஷோரூமில் நாங்கள் விற்பனையாளர்கள் மட்டுமே ரிப்பேர் என்றால் ‘அங்கு செல்லுங்கள்’ என வேறொரு இடத்துக்கு அனுப்பியுள்ளனர்.

நான் வாங்கியது புது செல்போன் உபயோகப்படுத்தும் முன்னே ரிப்பேர் ஆகியுள்ளது, எனக்கு வேறு செல்போன் மாற்றிக்கொடுங்கள் என அவர் கேட்க அதெல்லாம் இல்லை போய் ரிப்பேர் செய்துக்கொள்ளுங்கள் என அனுப்பியுள்ளனர். ரிப்பேர் செய்யும் கடைக்கு எடுத்துச் செல்ல அங்கு, கொடுத்துவிட்டுப் போங்க ரெடியானவுடன் சொல்கிறோம் என்று கூறியுள்ளனர்.

பெட்ரோல் ஊற்றி எரிப்பு

எப்போது ரெடியாகும் என்று கேட்டபோது ஒரு முக்கிய பார்ட் இல்லை அது வந்தவுடன் மாற்றி தர வேண்டும்.. எப்போது என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் செல்போனை தராமல் மீண்டும் செல்போன் ஷோரூமுக்கு வந்து செல்போனை மாற்றித்தரும்படி கேட்க அதெல்லாம் மாற்றமுடியாது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் புகார் செய்துக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளனர்.

ஏமாற்றம் அவமானத்துடன் வெளியேறிய அவர் பெட்ரோலை வாங்கிக்கொண்டு வந்து ஷோரூம் முன் செல்போன் அதன் பேக்கிங், பில், அவர்கள் கொடுத்த பை உள்ளிட்டவற்றின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துவிட்டுச் சென்றார். ஆசை ஆசையாக மகனுக்கு பரிசளிக்க வாங்கிய தந்தை அவமானத்துடன் சென்றது அங்கிருப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பு

இது குறித்து அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தால் உரிய தீர்வும், ஷோரூம் அவருக்கு நஷ்ட ஈடும் கொடுக்க நேர்ந்திருக்கும். ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லாததால் ஷோரூம் ஆட்கள் அலட்சியமாக அவரை அலைக்கழிக்க முடிந்தது என இத்துறை பற்றி அறிந்த ஒருவர் தெரிவித்தார்.




Leave a Reply