BREAKING NEWS

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப். 5-ம் தேதி வரை நீடித்தது, உச்சநீதிமன்றம்

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 21-ந் தேதி இரவு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மறுநாள் டெல்லி ரவுஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். பின்னர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் 30-ந் தேதி வரையும், பின்னர் செப்டம்பர் 2-ந் தேதி வரையும் நீட்டித்து தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 5-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. சிபிஐ, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டாம் எனவும், அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனவும் சிபிஐ கூறிய நிலையில், செப்டம்பர் 5-ம் தேதி வரை தற்போதைய நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.




Leave a Reply