தற்போதைய செய்திகள்

போடி காட்டுத் தீயில் சிக்கி 7 பெண்கள் உள்பட 9 பேர் பலி. ஆபத்தான நிலையில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்….

தேனி,
போடி அருகே குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 7 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 7 பேரையும், அவர்களது பெற்றோரையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குரங்கணி மலை

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது, குரங்கணி மலை. இது கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலைப்பகுதியில் வருடத்தில் 8 மாதங்கள் மழைப் பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் பசுமையாக காணப்படும். இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்து அமைந்துள்ள இப்பகுதியில் மலை ஏற்ற பயிற்சியும் நடைபெற்று வருகிறது.

கடந்த 10-ந் தேதி சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் 24 பேரும், திருப்பூர், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 12 பேரும் போடிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து குரங்கணிக்கு மலை ஏறும் பயிற்சிக்கு சென்றனர். 8 பேராக பிரிந்து 4 குழுக்களாக தனித்தனியாக அவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

காட்டுத்தீ


நேற்று முன்தினம் மாலை அவர்கள் மலை ஏற்றத்தை முடித்துவிட்டு மலையில் இருந்து கீழே திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென காட்டுத் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் மலையில் இருந்து கீழே திரும்பி வந்து கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காட்டுத்தீயில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக பயங்கரமாக கூக்குரலிட்டபடி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். உடனடியாக சிலர் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், அருகே உள்ள கிராம மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பற்றி எரிந்த காட்டுத் தீயுடன் புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
விமானப்படை
இந்தநிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானப்படை ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்கு செல்லும்படி உத்தரவிட்டார். உடனடியாக நிர்மலா சீதா ராமன் தேனி ஆட்சியர் பல்லவிதேவை தொடர்பு கொண்டு காட்டுத்தீ குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

இதையடுத்து கோவை, சூலூரில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் விமானப்படை கமாண்டோக்கள் குரங்கணி மலைக்கு விரைந்து வந்தனர். ஆனால் இரவாகி விட்டதால் ஹெலிகாப்டர்களால் வனப்பகுதியில் தீயில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

காட்டுத்தீ சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர். மேலும் சென்னையில் இருந்து 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுவினர் மீட்பு பணியை துரிதப்படுத்த தேனிக்கு சென்றனர்.
27 பேர் மீட்பு
இந்தநிலையில் தீயணைப்பு துறையினர் மற்றும் மலை ஏற பயிற்சி பெற்ற போலீசார் உள்ளுர் மக்கள் என 100 பேர் நேற்று முன்தினம் வனப்பகுதிக்குள் தீயை அனைத்தவாறே முன்னேறி சென்றனர். அங்கு இரவு 7 மணியளவில் சென்னையில் இருந்து மலையேறும் பயிற்சிக்கு சென்ற பிரபு, ராஜசேகர், சாதனா, பாவனா, மேகா, சஹானா, பூஜா மோனிஷர் ஆகிய 8 பேர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டனர்.
இரவு 8.20 மணி அளவில் விஜயலட்சும், நிவேதா, இரவு 11.50 மணியளவில் அனுவித்யா, இலக்கியா, கவிதா ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டனர். நேற்று அதிகாலை 1.45 மணியளவில் கண்ணன், நிவேதா, சக்திகலா, திவ்யா, நிஷா, தேவி பிரக்ருதி என மொத்தம் 14 பேர் மீட்கப்பட்டனர்,

காட்டுத்தீ எரிந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காயம் அடைந்த அனைவரும் டோலி மூலமே குரங்கணிக்கு தூக்கி வரப்பட்டனர். அங்கு தயாராக இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
10 பேர் பலி
இந்த காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர், 17 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். 10 பேருக்கு எந்த காயமும் இல்லை, இறந்தவர்களின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது என்று தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்தநிலை நேற்று காலை 6.30 மணிக்கு விமானப்படையை சேர்ந்த 16 கமாண்டோக்கள் 4 ஹெலிகாப்டர்களில் மீட்பு உபகரணங்களுடன் காட்டுத்தீ பற்றி எரிந்த வனப்பகுதிக்குள் நுழைந்தனர். வனப்பகுதியில் கருகிய நிலையில் இருந்த சென்னையை சேர்ந்த அகிலா, ஹேமலதா, புனிதா, சுபா, கோவையை சேர்ந்த அருண், விவின், ஈரோட்டை சேர்ந்த தம்பதி விவேக், விஜயா ஆகிய 9 பேரின் சடலங்களை மீட்டனர்.
ஒரு ஹெலிகாப்டர் சடலங்களை மீட்கும் பணியிலும், இரண்டு ஹெலிகாப்டர்கள் சடலங்களை தேனிக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதற்காக, தேனியில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருந்தது. மற்றொரு ஹெலிகாப்டர் நுரை கலந்த ரசாயன நீரை கொண்டு காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் 9 பேரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த விவேக் மகன் திவ்யா (25) சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

உறவினர்கள் கதறல்
விபத்து குறித்து அறிந்ததும் சென்னை, ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த உறவினர்கள் தேனி அரசு மருத்துவனையின் முன்பு நேற்று முன்தினம் இரவு முதலே குவியந்தனர். இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் அடையாளம் காட்டப்பட்டது. அப்போது அவர்கள் தீயில் கருகி கரிக்கட்டையாகி இறந்து கிடந்த உடல்களை பார்த்து கதறி அழுதனர்.் பின்னர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட 27 பேரில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி சரண்யா வாக்குமூலம் பெற்றார்.
இந்தநிலையில் தீக்காயத்தால் சிகிச்சை பெற்று வருபவர்களையும், பெற்றோரையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனையில் தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
Leave a Reply