BREAKING NEWS

போக்சோ சட்டமும் குழந்தைகள் பாதுகாப்பும்..!

நமது சமூகம் தாய்வழிச் சமூகமாக தோன்றி வளர்ந்ததில் இருந்த பெருமை, சமகாலத்தில் பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நடந்து வரும் குற்றகளும், அது சம்பந்தமாக நமக்கு கிடைக்கின்ற தரவுகளும் அந்தப் பெருமையை சிதைப்பதாகவே உள்ளது.

தாகம் தீர்க்கும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயர்களைச் சூட்டி பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ள நமது நாட்டில், பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பெண்களை தெய்வமாக வழிபடுகின்ற சமூகமாக  இருந்து வருகிற சமூகம் என்றும் பெருமைப்பட்டுள்கொள்கிற தருணத்தில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவது வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரியதாகும்.

இந்த நிலையில் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் போதிய விழிப்புணர்வு இல்லை என்று தொடர்ச்சியாக பொதுசமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் அளவிற்கு ஆணாதிக்கம் செல்வாக்கு செலுத்தியுள்ளது. அதனுடைய விளைவாகவும், நுகர்வு கலாசாரத்தின் பிரதிபலிப்பாலும் இப்பொதுச் சமூகம் பெண்களை இன்னும் ஒரு போகப்பொருளாகவே மட்டும் பார்த்து வருகிறது, ஆனால், அதை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

இந்தநிலையில், இம்மாதிரியான குற்றங்களை தடுப்பதற்கு போக்சோ புோன்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதுகுறித்தான ஒரு பார்வை…

நடைமுறையில் போக்சோ:

இந்தச் சட்டம் 2012 -ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏழு வயது மற்றும் ஒன்பது வயது உள்ள சிறுமிகள் இருவரும் சகோதரிகள். அவர்களுக்கு பாலியல் ரீதியாக ஓர் ஆண்டுக்கும் மேலாக துன்புறுத்தல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு காரணம் அந்தக் குழந்தைகளின் உறவினர்களே என்று நினைக்கும் பொழுது மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும். இது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளது என்பதுதான் வேதனையான ஒன்று.

அந்தக்  குழந்தைகள் பள்ளியில் சேர்த்த பிறகு பள்ளி ஆசிரியர்கள் அந்த குழந்தைகளின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள் அங்கே இருக்கிற மருத்துவர்களும் மனிதநேயத்தோடு அந்தக் குழந்தைகளை அணுகி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினைகளைத் தெரிந்து கொள்கிறார்கள்.

உடனடியாக தாமாகவே முன்வந்து மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கிறார்கள்.  அதன் பிறகு அவர்கள் அந்தக் குழந்தைகளிடம் விசாரணை மேற்கொள்கிறார்கள். குழந்தைகளின் தாயிடமும் விசாரணை மேற்கொள்கிறார்கள்.  அந்தக் குழந்தைகளின் தாய் தன் கணவரிடமிருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதனால் குழந்தைகள் மீது அவருக்கு அக்கறை இல்லை அந்தக் குழந்தைகளை தன் தாய் வீட்டில் அதாவது குழந்தைகளின் பாட்டி வீட்டில் விட்டு விடுகிறார்.  குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அந்தக் குழந்தைகள் மீது பாலியல் வன்முறைகளைச் செலுத்தி இருக்கிறார்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.

இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 15 பேரிடம் விசாரணை மேற்கொண்டு 10 பேரை குற்றவாளியாகக் கண்டறிந்த காவல்துறை அந்த பத்து பேரில் 8 பேரை கைது செய்திருக்கிறது அந்த 8 பேரில் ஆறு பேர் சிறுவர்கள் இந்நிலையில் நேற்றும் மேலும் ஒரு விபத்து விசாரணை மேற்கொண்டது காவல்துறை மீண்டும் 10 பேரிடம் விசாரணை அந்த 10 பேரில் 4 பேரை நேற்று கைது செய்திருக்கிறது காவல்துறை இவர்கள் அனைவருமே போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது போல ஒவ்வொருமுறையும் குழந்தைகள் பாதிக்கப்படும் போது யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதும் அக்கறையற்ற போக்குமாகும்.

 

போக்சோ குறித்தான விரிவான பார்வை:

8 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளுக்கும் பாலின வித்தியாசம் இன்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்தான் போக்ஸோ சட்டம்.

போக்ஸோ சட்டம் செயல்பாட்டில் இருந்து வரும் இந்த நிலையில் போக்ஸோ சட்டப் பிரிவு 3 மற்றும் 4 படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம்.  இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள் ஆகும். அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாக உள்ளது கூடவே அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் சட்டம் பிரிவு 5 மற்றும் 6 குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி இவர்கள் குழந்தைகளின் பெற்றோர் கார்டியன் ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்றும் மேலும் அவருக்கு அபராதமும் உண்டு என்றும் சொல்கிறது.

அதேபோன்று சட்டப் பிரிவு 7 மற்றும் 8-ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பை தொடுவது அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்பை கட்டாயப்படுத்தி தொட வைப்பது அதுவும் குற்றமாகவே பார்க்கப்படுகிறது அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது தொடர்பாக குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக 8 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும் சட்டப் பிரிவு 9 மற்றும் 10-ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தவர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது ஆசிரியர் மற்றும் காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும். அத்துடன் அபராதமும் உண்டு என்று சொல்கிறது. சட்டப் பிரிவு 11 மற்றும் 12-ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகளை காட்டுவது தொலைபேசி மற்றும் நேரில் ஆபாசமாக பேசுவது… மின்னஞ்சல் அனுப்புவது… திட்டுவது… பாலியல் இச்சைக்கு அழைப்பது ஆகிய குற்றங்களுக்கு குற்றவாளிகளுக்கு அபராதமும் அதிகபட்சமாக 3 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்றும் மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டப் பிரிவு 13 மற்றும் 14 குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது… விற்பது… தயாரிப்பது மற்றவருக்கு கொடுப்பது ஆகியவை குற்றமாகக் கருதப்படும். இவை இணைய தளம் கணினி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்த பட்சமாக 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. சட்டப் பிரிவு 18 குழந்தைகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட முயன்றால் ஒரு வருட சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே.

என்ன செய்ய வேண்டும் நாம்.?

இப்படி தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது அதிகரித்து வந்தாலும் கூட அவற்றை எதிர் கொள்கிற விதத்தில் சட்டங்களும் இயற்றப்பட்டுத்தான் இருக்கிறது.  ஆனாலும் இதை சட்டங்கள் மட்டுமே செய்து விடும் என்றும் அரசு செய்து விடும் என்றும் மெத்தனமாக இருந்துவிடாமல் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.  குறிப்பாக பெண் குழந்தைகள் தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அவசியமான ஒன்று.

பெண் குழந்தைகளுடன் பேச வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இதற்கு காரணமாக இருப்பவர்கள் குழந்தைகளாக இருக்கும் ஆண்களும்தான். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளிடம் இது பற்றி தெளிவாகப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அவர்களிடம் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுங்கள். பாலியல் ரீதியான இந்தத் தொந்தரவுகள் துன்புறுத்தல்களைப் பற்றி அவர்களிடம் விளக்கமாகப் பேசுங்கள் அவர்களுக்குப் புரிய வையுங்கள். இதுபோன்ற பிரச்சனைகளால் பல பெற்றோர்கள் பெண்குழந்தைகள் பெற்றுக்கொள்வதையே வேண்டாம் என்கிற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  ஏனென்றால், இப்போது இருக்கிற கனிணி உலகத்தில் நாம் குழந்தைகளை கவனிக்கத் தவறுகிறோம் அதனால்தான் இதுபோன்ற குற்றங்கள் நிகழ்கிறது என்று கருதுகிறார்கள்.

எனவே, ஆண் குழந்தைகளுக்குத்தான் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் பொது இடங்களில் இது பற்றி பேசுங்கள் அப்படி பேசுவதால் என்ன நடக்கும் என்றால் இன்று பாலியல் ரீதியாக குற்றங்கள் செய்தவர்கள் நாம் பேசுகிற இடத்தில் நம்முடன் கூட இருந்து விடலாம். இவ்வாறு பேசுவதால், அங்கே அவர்களுக்கு அந்த விழிப்புணர்வு ஏற்படும். எனவே, இதை பொதுவெளியில் பேசுங்கள். குழந்தைகளை எப்பொழுதும் தனிமைப்படுத்துவதையோ சந்தேகத்துக்குரிய உறவினர்களிடம் விடுவதையோ தவிர்த்து, உங்களுடைய அன்பிலும் அரவணைப்பிலுமாக கவனித்துக்கொள்ளுங்கள். அவர்களோடு விளையாடுங்கள் மனம் விட்டுப் பேசுங்கள். குழந்தைகளைக்கொண்டாடுங்கள். குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட குழந்தைகளைக் கொண்டாடுவது சிறந்தது..!

– ஜோதி நரசிம்மன்,

ஊடகவியலாளர் / எழுத்தாளர்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *