தற்போதைய செய்திகள்
Tamil_Daily_News_1640239953995

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ். இன்று முதல் வழக்கம்போல் பஸ்கள் ஓடும் என அறிவிப்பு….

சென்னை, ஜன. 12-
உயர்நீதிமன்றத்தில் வேண்டுகோளை ஏற்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் இன்று முதல் வழக்கம்போல் பஸ்கள் ஓடும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
போராட்டத்துக்கு தடை
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை எதிர்த்து வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரணை செய்து வேலை நிறுத்த போராட்டத்திற்கு கடந்த 5-ந் தேதி தடை விதித்தனர். தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், முன் அறிவிப்பின்றி போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அரசு விளக்கம் கேட்க வேண்டும் என்றும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.
பின்னர் இந்த தடையை நீக்குமாறு தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டன. ஆனால் அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இதன் பிறகு இந்த வழக்கு நீதிபதி எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜூ அடங்கிய அமர்விற்கு மாற்றப்பட்டது.
மனசாட்சிப்படி முடிவு
மக்கள் படும் அவதியை மனதில் எடுத்துக் கொண்டு போராட்டத்தை கைவிடுவது குறித்து மன சாட்சிப்படி போக்குவரத்து ஊழியர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொழிற்சங்கங்கள் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 காரணி ஊதிய உயர்வை இடைகால நிவாரணமாக ஏற்றுக் கொள்கிறோம், 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மற்ற கோரிக்கைகள் குறித்தும் முடிவு செய்ய மத்தியஸ்தரை நியமித்து இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எடுக்க வேண்டும்.
போராட்டத்தின் போது, போக்குவரத்து தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் ெபற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ேவலைக்கு வரவில்லை என்று கூறி சம்பளத்தை பிடித்தம்செய்யக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மீண்டும் விசாரணை
தலைமை அரசு வக்கீல் விஜய் நாராயண் வாதாடுகையில் கூறியதாவது, போராட்டம் நடைபெற்ற போது போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் பொதுச் சொத்தை சேதப்படுத்தி உள்ளனர். இதனால் இந்த வழக்கை வாபஸ் பெற முடியாது. ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த அரசிடம் கருத்து கேட்டு தெரிவிக்கிறேன் என வாதாடினார்.
அரசின் கருத்தை பிற்பகலுக்குள் கேட்டு தெரிவிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் மனு ஒன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், மத்தியஸ்தத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அதே சமயம் போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான குற்ற வழக்குகளை வாபஸ் பெற முடியாது என்றும், மனுவில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற வக்கீல்கள் வாதம் வருமாறு:-

கைவிட முடியாது

நீதிபதிகள்: பேச்சுவார்த்தையை மட்டும் அரசு ஏற்பதாக கூறியுள்ளது. மற்றவற்றை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

அரசு வக்கீல்: வேலை செய்யாமல் ஊதியம் கொடுக்க முடியாது. குற்ற வழக்குகளை கைவிட முடியாது.

தொழிற்சங்க வக்கீல்: கோரிக்கைகளைப் பற்றி பரிசீலித்து பேச்சுவார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். மத்தியஸ்தர் முன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது எங்கள் கோரிக்கைகளில் என்ன பேச வேண்டும் என்பதை நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும்.

அரசு வக்கீல்: 0.13 காரணி ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற பிரச்சினை குறித்து மத்தியஸ்தர்தான் முடிவு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை தேதியையும் மத்தியஸ்தரே முடிவு செய்யலாம்.

தொழிற்சங்க வக்கீல்: ஊதிய உயர்வு குறித்து மத்தியஸ்தர் முடிவு எடுக்கட்டும். எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றமே முடிவு செய்யலாம்.
உங்கள் விருப்பம்
நீதிபதிகள்: சங்க உறுப்பினர்களுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள், பொதுமக்கள் படும் சிரமத்தை நீங்கள் பார்க்கவில்ைலயே? அரசு முன்வரவில்ைல என்று குற்றம் சாட்ட கூடாது. இன்று கூட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் நலனுக்காக மத்தியஸ்தரை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளது. எனவே தொழிற்சங்கத்தை சேர்ந்த நீங்கள் பொதுமக்கள் அடையும் துன்பத்தையும் பார்க்க வேண்டும்.
அரசு வக்கீல்: ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தால் அதை அரசு ஏற்றுக் கொள்ளும். அவர் விசாரணை நடத்த அரசு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும்.
நீதிபதிகள்: சமரச பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. அதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பமாகும். மத்தியஸ்தத்தை ஏற்காவிட்டால் நாங்களே விசாரிப்போம். ஊதிய உயர்வு மட்டும்தான் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்சங்கம் அறிக்கை
இப்போது வழக்கை கைவிட வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விடுமுறை ஊதியம் வழங்க வேண்டும், குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றெல்லாம் பல ேகாரிக்கைகளை மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களே? நாங்கள் பிறப்பிப்பது இடைக்கால உத்தரவு தான்; நிரந்தர உத்தரவு இல்லை. விபத்து இழப்பீடு வழக்குகள் தொடரப்படுவதற்கு காரணம் உங்கள் ஓட்டுநர்கள் தானே?
ெதாழிற்சங்க வக்கீல்: பழுதுபட்ட பேருந்துகளை கொடுத்தால் எப்படி ஓட்டுவது?
அரசு வக்கீல்: போராட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் அறிக்கை விடுகிறார்கள்.
நீதிபதிகள்: எதையும் பேசும்போது கட்டுப்பாடுடன் பேச வேண்டும்.
அரசு வக்கீல்: போராட்டம் தொடர்பாக இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொழிற்சங்க வக்கீல்: 60 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
4 வாரங்களுக்கு தள்ளி வைப்பு
நீதிபதிகள்: மத்தியஸ்தம் தொடர்பாக மட்டுமே உத்தரவு பிறப்பிக்கிறோம். ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமிக்கிறோம், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள். இயல்பு நிலை திரும்பட்டும், பணிக்கு திரும்ப வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு வக்கீல்கள் வாதம் நடைபெற்றது. தொழிற்சங்கம் சார்பில் என்.ஜி.ஆர்.பிரகாஷ், ஜார்ஜ்வில்லியம், அரசு தரப்பில் தலைமை அரசு வக்கீல் விஜய் நாராயண் ஆஜராகி வாதாடினார்கள்.
பணிக்கு திரும்ப உத்தரவு
இதன் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது, முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என ேபான்ற அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்காதபடி உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுகோள் விடுத்தோம்.
அதன்படி போக்குவரத்து தொழிலாளர்களின் 0.13 காரணி ஊதிய முரண்பாடு குறித்தும், இந்த ஊதிய உயர்வு எப்போது முதல் அமலாகும் என்பது குறித்தும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிபதி இ.பத்மநாபனை சமரச தீர்வாளராக நியமிக்கிறோம்.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பொங்கலை முன்னிட்டு தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
Leave a Reply