தற்போதைய செய்திகள்
eps

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்…..

சென்னை, ஜன.10-
போக்குவரத்து துறை ஊழியர்கள் 2.44 மடங்கு ஊதிய உயர்வு கேட்பது நியாயமல்ல. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து போக்குவரத்து துறை ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சி கேள்வி
கடந்த 4-ந் தேதியில் இருந்து போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இதுகுறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அனுபவம் மிக்கவர்
அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து கூறியதாவது:
எதிர்க்கட்சி துணைத் தலைவர் அனுபவம் மிக்கவர். ஆகவே எப்படி எப்படியோ பேசி ஒரு தவறான கருத்தை இங்கே பதிய வைத்திருக்கிறார். என்னவென்றால், முதலமைச்சருக்கு ஆர்வம் இல்லையா என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். அது தவறு. “முதலமைச்சர் ஏன் முன்வரவில்லை” என்ற ஒருகேள்வியை கேட்டிருக்கிறார்.
ஏற்கனவே நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசியபோது, என்னுடன் பேசிவிட்டு சென்று தான்; எங்களுடைய கருத்தின் அடிப்படையிலே தான் அங்கே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முதல்வர் பேசவில்லை என்பது தவறு
அதாவது, முதலமைச்சர் சொல்லித்தான் அவர் அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தந்தார். ஆகவே, முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்வது தவறானது. முதலமைச்சர் என்ற முறையில் ஊழியர்களை மதிக்கக்கூடியவன், உழைப்பவர்களை மதிக்கக்கூடியவன். ஆகவே தான் 11 முறை போக்குவரத்துத் துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவு எடுத்திருக்கிறார்.
மேலும் கேட்பது நியாயமல்ல
அதுமட்டுமல்ல, ஒரு சுமூகமான நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். அதைத்தான் நாங்களும் எங்கள் தரப்பில் இருந்து தெரிவித்திருக்கிறோம். ஆகவே, எதிர்க்கட்சி தலைவரும், துணைத் தலைவரும் இதை நன்கு ஆலோசனை செய்து, இருக்கின்ற நிதி நிலைமை, போக்குவரத்து கழகத்தின் நிதி நிலைமை நன்றாக உங்களுக்கு தெரியும். ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது நியாயமல்ல.
உங்கள் ஆட்சியில் ரூ.922 கோடி
ஏனென்றால், தற்போது இருக்கின்ற நிலைமையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். உங்களுடைய ஆட்சியிலேயே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 922 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறீர்கள். ஆகவே, அதனுடைய நிதிநிலைமை உங்களுக்கு நன்றாக தெரியும். இதையெல்லாம் உணர்ந்து தான் தற்போது இருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நான் தற்போது 2.44 மடங்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்து அதை அறிவிக்கப்பட்டு, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.
தலைமை நீதிபதி ஆணை
ஆகவே, எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும், உறுப்பினர்களுக்கும் உதவிகரமாக இருக்க வேண்டும். வேலை நிறுத்தத்திலே ஈடுபட்டவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஏனென்றால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே தெரிவித்திருக்கிறார்கள். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே, இரண்டு முறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.
கடும் பாதிப்பு
அதை எல்லாம் மதித்து, இருக்கின்ற நிலைமையை உணர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்யக் கூடிய நிறுவனமாக போக்குவரத்து கழகம் இருக்கின்ற காரணத்தினாலே, எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப்போல மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் உணர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்லி, பிரதிநிதிகளும், அதோடு போக்குவரத்து ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.




Leave a Reply