BREAKING NEWS

”பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் போராட்டம்…”

தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவ சங்கங்களைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுகுறித்து சமூக மாற்றத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரான டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். அவர் நம்மிடம்,

 

“தமிழகத்தில் பணிசெய்யக்கூடிய மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களில் பணிபுரியக்கூடிய மருத்துவர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஊதியத்தைக் காட்டிலும் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களோடு ஒப்பிடுகையிலும் ஊதியம் குறைவாக உள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வேண்டுமென்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 2009-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியில் சேர்ந்து 20-வது வருடத்தில் பெறப்படக்கூடிய ஊதிய தொகையினை, 12-வது வருடத்திலேயே வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

புதியதாக MBBS படித்துவிட்டு பணி தொடங்குகிற மத்திய அரசு மருத்துவருக்கும், மாநில அரசு மருத்துவருக்கும் தொடக்கத்தில் ஒரே சம்பளம்தான். ஆனால், இருபது வருடம் முடியும் தருவாயில் மத்திய அரசு மருத்துவர் வாங்கும் ஊதியத்தைவிடக் குறைவாகத்தான் மாநில அரசின் மருத்துவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். எனவே, இதனை மாற்றக் கேட்டு மருத்துவர்கள் கடந்த ஒண்ணரை வருடங்களாக போராடி வருகிறார்கள். ஆனால், மாநில அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்துவருகின்றனர்.

மருத்துவர்களினுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வருடம் செப்டம்பரில் சென்னையில் பிரமாண்டமான பேரணியை 12 ஆயிரம் மருத்துவர்கள் நடத்தினார்கள். அதன் பிறகும் பலக்கட்ட போராட்டங்களை மருத்துவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். கறுப்புப் பட்டையணிந்து பணிக்கு செல்வது, மனிதச் சங்கிலி இயக்கம் என பல வழிமுறைகளில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தினை ஈர்க்க முயற்சித்தினர். கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் மூன்று பெண் மருத்துவர்கள் உட்பட ஆறு மருத்துவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்க்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஐந்து சங்கங்களை உள்ளடக்கிய ‘அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு’ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டமும் நடைப்பெற்றது. சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்களில் நான்குபேர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்ட ஆதரவு, மற்றும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் போன்ற அழுத்தத்தினாலும் அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுடைய கோரிக்ககைள் 6 வாரத்தில் நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் வாக்குறுதி கொடுத்தார். ஆனாலும் அது நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கை நிறைவேற்றப்படாததால் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். ஐந்து மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 97 சதவிகித மருத்துவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில், மேலும் காய்ச்சல் தீவிரமடைவதைத் தடுப்பதற்காக சில மருத்துவர்களை கையெழுத்திடாமல் பணிசெய்ய சங்கங்கள் வழிகாட்டியுள்ளன. மேலும் விபத்துப்பிரிவு, அவசரப்பிரிவு, பிரசவப் பிரிவு, அவசர அறுவை சிகிச்சைப்பிரிவு போன்றவற்றில் மருத்துவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தமில்லாமல் இயங்கிவருகிறார்கள். ஆனால், சிறு பாதிப்பு கூட வரக்கூடாது என்பதற்காக, அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் தலையிட்டு கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும் என்று டாக்கடர்கள் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசு பிரதிநிதிகளின் மேலுள்ள நம்பகத்தன்மையை இழந்துவிட்டோம், இனி தமிழக முதல்வர் நேரடியாக இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஊதிய உயர்வு மட்டுமே பிரதான கோரிக்கையல்ல. மாறாக, அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். இதில் முதுநிலை மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே 50 சதவிகித இடஒதுக்கீடு இருந்தது. தற்போது அதை (Medical council of India) ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் முதுகலைப் படித்த போதிய மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். இதன் காரணமாக அரசு மருத்துவமனைகள் பெரிய அளவில் பாதிக்கப்படும், அரசு மருத்துவமனைகளை நாடுபவர்கள் பெரும்பாலும் சாமானிய மக்களாகவே இருக்கும்பட்சத்தில் அவர்களும் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே, அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு அவசியமானதாகும். எனவே, மாநில அரசு ஒரு புதிய சட்டத்தினை இயற்றி இந்த இடஒதுக்கீட்டினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மேலும் முதுநிலை மருத்துவம் படித்த அரசு மருத்துவர்களை மீண்டும் கவுன்சிலிங் அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டம் என்பது மருத்துவர்கள் விரும்பி நடத்திக் கொண்டிருக்கும் போராட்டமல்ல. இது திணிக்கப்பட்ட போராட்டம். மாநில தலைமையான ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதைவிட மோசமான சூழலே நிலவுகிறது. தமிழகம் முழுவதிலுமுள்ள 18 ஆயிரம் அரசு மருத்துவர்களில் 17 ஆயிரம் மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். எனவே போராட்டத்தின் தீவிரத்தையுணர்ந்து அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.” என்றார்.

– டாக்டர் ரவீந்திரநாத்

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *