BREAKING NEWS

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இளம்பெண் பலி

சென்னை, பள்ளிக்கரணையில் பேனர் சாய்ந்து விழுந்ததால், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற சுப என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பேனர்கள் வைக்ககூடாது என்று முதல்வரும், துணை முதல்வரும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. தி.மு.க. பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று அனைவரையும், நான் பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் பேனர் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:

பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் ஆகும்.

பா.ம.க. நிகழ்ச்சிகளில் பதாகைகள், கட் அவுட்களுக்கு இடம் கிடையாது. பா.ம.க. நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும் பா.ம.க. நிர்வாகிகளால் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த விதியை மீறுவது குறித்து பா.ம.கவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.

தினகரன்

அரசியல் கட்சியினர், தனி நபர்கள் என யாரும் மக்களுக்கு இன்னலை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற விளம்பரப் பதாகைகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உறுதியோடு இருந்து இவற்றைத் தடுக்க வேண்டும். ஈடுசெய்ய முடியாத இத்தகைய உயிரிழப்புகள் இனி ஒருபோதும் நடக்காதபடி அனைத்துத் தரப்பினரும் பொறுப்போடும், சமூக அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும். அ.ம.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் எதற்கும் இது போன்று சாலை மையத்திலும், நடைபாதை ஓரங்களிலும் பதாகைகள் வைக்க வேண்டாம்.

த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன்

தா.ம.க.வினர் பேனர்கள், கட் அவுட்டுகள், போஸ்டர்களை எங்கு வைக்க அனுமதி உண்டோ அங்கு மட்டும் முறையாக அனுமதி பெற்று வைக்க வேண்டும். மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலைகளிலும், வீதிகளிலும், பொது இடங்களிலும் விளம்பரங்கள் செய்யக்கூடாது. விதிகளுக்கு உட்பட்டு விளம்பரங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply