BREAKING NEWS

பெரியார், வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

பெரியார், வைகை அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரியார் அணை

தேனி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இதையேற்று தேனி, கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி குடிநீர் தேவைக்காகவும் பெரியார் அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி வீதம் நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வைகை அணை

தேனி, கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்களின் கோரிக்கையினை 45,041 ஏக்கர் நிலங்களுக்கு, நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கனஅடி தண்ணீரினை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து நாளை முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி திருச்சி, தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து நடப்பாண்டு பாசனத்திற்காக இன்று முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதன் மூலம் திருச்சி, தஞ்சை அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.




Leave a Reply