தற்போதைய செய்திகள்

பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறிய-எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…..

சென்னை,
பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று பேசுகையில் வலியுறுத்தினார்.
கலவரங்கள்
பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து, சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசின் ககவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது:
திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலை இடிக்கப்பட்ட நேரத்தில், தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று, பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவரே கூறி, அது பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் செய்தியாக வந்து, அதனால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். அதனைத்தொடர்ந்து, ஏற்பட்ட போராட்டங்களில் தமிழகமே தந்தை பெரியார் அவர்களுக்காக கொந்தளித்ததை நாடு கண்டது. எச்.ராஜா பா.ஜ.கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவராக மட்டுமல்ல, ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டு கமிட்டியின் தலைவராக இருக்கிறார்.

அரசுக்கு கோரிக்கை 
கடந்த 6-ம் தேதி, திருப்பத்தூரில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் இரவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தொகுதியில், விடுதி என்ற பகுதியில் இருந்த பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறியவரை, இந்த அரசு உடனடியாக கைது செய்திருக்க வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டுமென்று நான் கூட ஒரு வேண்டுகோளாக இந்த அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன்.
இழிவான செயல்
அவரை கைது செய்யாத காரணத்தால் தான், இன்றைக்கு தந்தை பெரியார் சிலை மீது கைவைக்ககூடிய துணிச்சல் பலருக்கு வந்திருக்கிறது. எனவே, புதுக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை உடைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட இழிவான செயலை தூண்டி விட்டவர்களையும் கைது செய்ய வேண்டும்.
எதிர்த்தவர்கள் கைது
அதேபோல, ரத யாத்திரையை எதிர்த்துப் போராடியவர்களை கைது செய்திருக்கின்ற இந்த அரசு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டிருப்பவர்கள் மீது, கை வைக்கத் தயங்குவது ஏன்? இந்த அவையில் இந்தக் கேள்வியை மட்டும் முன்வைத்து, இதற்கு முதலமைச்சர் என்ன விளக்கம் தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply