தற்போதைய செய்திகள்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது கட்டாயம் கனிமொழி எம்.பி. வருத்தம்…

சென்னை,

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று தி.மு.க. எம்.பி.கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொலை சம்பவம்

சென்னை, கே.கே.நகரில் நேற்று முன்தினம் கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி என்பவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, மகளிர் தினத்தன்று தஞ்சையில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண் உஷாவை போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் சம்பவ இடத்திலேயே உஷா உயிரிழந்தார். இந்த சம்பவங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாதுகாப்பு கட்டாயம்

இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று தனது முகநூல் பக்கத்தில், சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் போலீஸார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது.

கல்லூரிக்கு படிக்கவும் செல்ல முடியவில்லை. வேலைக்கு சென்று வீடு திரும்பவும் முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்காப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள் ஆட்சியாளர்களே என்று பதிவிட்டுள்ளார்.

 
Leave a Reply