BREAKING NEWS

பெட்ரோல்- டீசல் விலையை கண்டித்து  பந்த் பேருந்துகள் வழக்கம் போல் இயக்க அரசு நடவடிக்கை – டேப்போக்கள் முன்பு போலீசார் குவிப்பு.


 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (திங்கள்கிழமை) பாரத் பந்த் நடைபெறுகிறது. இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.

கடந்த 15-ந் தேதிக்கு பிறகு ஏறு முகத்திலே உள்ள பெட்ரோல் விலை தற்போது ரூ.90 யை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விலை ஏற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறி வருகிறது.

கலால் வரி

ஆனாலும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்க பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசோ, வாட் வரியை குறைக்க மாநில அரசோ முன்வரவில்லை. இதன் காரணமாக, தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்திற்கு அகில இந்திய அளவில் சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முழு அடைப்பில் பங்கேற்காவிட்டாலும், போராட்டங்களை நடத்துவதாக அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள்

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளன. இதே நாளில் இடதுசாரிகளும் தனியாக போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாகா, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் முழு அடைப்பு போராட்டம் மாலை 3 மணி வரை நடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளதால் நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சங்கம்

ேபாராட்டத்திற்கு தமிழக போக்குவரத்து கழக கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தொமுச நடராஜன், சிஐடியு அன்பழகன், எச்எம்எஸ் சுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்ட 10 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 10 முக்கிய தொழிற்சங்கத்தை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

பாதுகாப்பு

இதனால் இன்று 70 சதவீதம் அரசு பேருந்துகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நாள் நடைபெறும் போராட்டம் என்பதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்க மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் பேக்குவரத்து சேவையை முழுமையாக இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.




Leave a Reply