BREAKING NEWS

பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி இருக்கும் பிரமாண்ட பேனர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன், பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் மிகப்பெரிய ‘பேனர்’ இஸ்ரேலில் வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் ஒயிட் கட்சிக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

இதற்கிடையே, பொது தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீண்டும் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இஸ்ரேல் பிரதமராக 5-வது முறை பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சட்டப்படி மே 29ம் தேதி நள்ளிரவுக்குள் பெஞ்சாமின் நேதான்யாஹூ இஸ்ரேலின் புதிய அரசை உருவாக்க வேண்டும்.

ஆனால் அவரால் திட்டமிட்டப்படி கூட்டணி அரசை உருவாக்க முடியவில்லை. கடந்த 2015ம் ஆண்டு இஸ்ரேல் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், பெஞ்சமின் நேதான்யாஹு அரசு பழமைவாத ஹரேதி இஸ்ரேலியர்களையும் ராணுவப் பணியில் சேர்க்கும் மசோதா ஒன்றை அறிமுகம் செய்தது. இதற்கு ஹாரேதி இஸ்ரேலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, இஸ்ரேலில் அரசு அமைக்கும் விஷயத்தில் இந்த மசோதா குறித்த விவாதம் நடைபெற்றது. மசோதா குறித்து இருதரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பெஞ்சமின் நேதான்யாஹூவால் கூட்டணி அரசை உருவாக்க முடியவில்லை.

இதனால் கடந்த மே 30-ம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தை கலைக்க 75 பேரும் கலைக்க எதிர்ப்பு தெரிவித்து 45 பேரும் வாக்களித்தனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி இஸ்ரேலில் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 17ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்க துவங்கி உள்ளது. பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முனைப்பு காட்டி வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் விளம்பரத்தில், நேதான்யாகுடன் பிரதமர் மோடி இருப்பது போன்ற பிரமாண்ட ‘பேனர்’, இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் உடன் நேதான்யாகு இருக்கும் பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

உலக தலைவர்களை பயன்படுத்தி, லிகுட் கட்சி செய்த இந்த விளம்பரம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்நாட்டு பத்திரிகையாளர் அமிசாய் ஸ்டெய்ன் என்பவர் இந்த போட்டோக்களை, டுவிட்டரில் பதிவிட, அது வைரலாக பரவி வருகிறது.




Leave a Reply