BREAKING NEWS

‘பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ இர்பான் பதான் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ‘ஜஸ்பிரித் பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ என்று இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்தியர் பும்ரா ஆவார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நிலையில் பும்ராவுக்கு, இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனையாளர்களில் ஒருவருமான இர்பான் பதான் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

இந்திய அணியில் மிகவும் முக்கியமான வீரராக பும்ரா இருப்பதாக நம்புகிறேன். அவர் விளையாடாதபோது, அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். அந்த அளவுக்கு அணியில் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். பும்ரா போன்ற வீரரால் இந்திய அணி ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

பும்ராவினால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் வெற்றிகரமாக செயல்பட முடியும். ஆனால் அவரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பும்ரா இந்த ஹாட்ரிக் சாதனையுடன் நின்று விட மாட்டார். இன்னும் அதிகமான ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவார்.

இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.




Leave a Reply