காந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது!

கல்லால் அடித்துக் கொல்லப் போகிறார்களா….

கழுத்தை நெரித்துக் கொல்லப் போகிறார்களா….

மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்துக் கொல்லப் போகிறார்களா…

எப்படிக் கொல்லப்போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லையே தவிர,  எப்படியாவது கொன்று விடப் பார்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கலவரமான நிலவரத்தைப் பார்க்கும்போது!

தொடர்ந்து பி.எஸ்.என்.எல். விவகாரத்தை அவதானித்து வருகிறவர்கள்,   மெல்ல மெல்லக் கொல்லும் விஷத்தைப் பயன்படுத்தித்தான் அதைப் படுத்த படுக்கையாக்கியிருக்கிறார்கள் என்பதை, குத்துமதிப்பாகவாவது அறிந்து வைத்திருக்கக்கூடும்.

நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று சுமார் ஒன்றேமுக்கால் லட்சம் ஊழியர்களைக் கொண்ட பிரமாண்டமான பொதுத்துறை நிறுவனம் ‘இந்தியத் தொடர்பாடல் கழக நிறுவனம்’ எனப்படுகிற பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்). நாடெங்கும் சுமார் இருபதாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் கோபுரங்கள் அதற்குச் சொந்தம். நாடெங்கும் அது பதித்திருக்கும் ஆப்டிகல் கேபிள்களின் நீளம், சுமார் 5 லட்சம் மைல்களுக்கு மேல். அதன் மதிப்பு சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த நிறுவனத்துக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு, ஒரு லட்சம் கோடியைத் தாண்டும்.

இப்படியொரு நிறுவனம், ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தைக் கூட கொடுக்க முடியாமல் தடுமாறுவதுதான் கொடுமை. கொழுத்த லாபத்தின் மூலம் அரசாங்கத்தின் கஜானாவைக் கொழிக்க வைத்த அந்த நிறுவனம், ‘ஒன்றே முக்கால் லட்சம் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கப் பணம் வேண்டும்’ என்று அரசாங்கத்திடம் கையேந்துவதும், ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பதைப் போல் அரசாங்கம் அசட்டையாக வேடிக்கை பார்ப்பதும் கொடுமையிலும் கொடுமை.

பத்தாண்டுகளுக்கு முன்வரை, இந்தியாவின் பெருமிதத்துக்குரிய பொதுத்துறை நிறுவனமாகத் தலைநிமிர்ந்து நின்ற பி.எஸ்.என்.எல்., சுமார் 10 கோடி இந்தியர்களின் அன்றாட வாழ்க்கைத் துணை. 2002 அக்டோபரில் அதன் அலைபேசி (செல்போன்)  சேவையை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தொடங்கிவைத்தார். பி.எஸ்.என்.எல்  சிம்கார்டு வாங்க, 2 மைல், 3 மைல் நீள கியூவில் மக்கள் நின்றதெல்லாம் மிக மிக அண்மைக்கால சரித்திரம். அப்போது அலைபேசி சேவையில், நம்பர் ஒன் அதுதான்!

2002 முதல் 2005 வரை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பொற்காலம் என்கிறார்கள், அதன் முன்னாள் அதிகாரிகள். அப்போது அதன் ரொக்கக் கையிருப்பு, 35 ஆயிரம் கோடி ரூபாய். இதெல்லாம் வாஜ்பாய் கால வரலாறு.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நமது அலைபேசிகளுக்கு வருகிற வருகை அழைப்புகளுக்கே(இன்கமிங் கால்ஸ்) நிமிடத்துக்கு 8 ரூபாய் வசூலித்துக் கொண்டிருந்த காலத்தில், இன்கமிங் இலவசம் – என்று அறிவித்த முதல் நிறுவனம் பி.எஸ்.என்.எல்தான். இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை இந்தியாவுக்குள் செயல்படும் எந்த நிறுவனத்தின் அலைபேசி அல்லது தொலைபேசியையும்  இலவசமாகத் தொடர்புகொண்டு பேசலாம் என்று அது அறிவித்ததெல்லாம், நிஜமாகவே தொலைத் தொடர்புப் புரட்சி.

இப்படியெல்லாம் கொடிகட்டிப் பறந்த பி.எஸ்.என்.எல், சொந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே அரசிடமும் வங்கிகளிடமும் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம்? இது, உண்மையாகவே பில்லியன் டாலர் கேள்வி.

வாஜ்பாய் அரசு சிகரத்தில் கொண்டுபோய் நிறுத்திய ஒரு நிறுவனத்தை, மோடி அரசின் அம்பானி ஆதரவு நிலைப்பாடு  அதலபாதாளத்தில் வீழ்த்திவிட்டது – என்பது பரவலாக எழுப்பப் படுகிற குற்றச்சாட்டு. மேலதிகக் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.

போட்டி நிறைந்ததாக தொலைத் தொடர்புச் சந்தை மாறிவிட்ட நிலையில், உடனுக்குடன்  முடிவுகளை எடுத்து, தான் முதலிடத்தில் இருக்கிற ஒரு  சந்தையைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க பி.எஸ்.என்.எல். தவறிவிட்டது என்பது ஒரு குற்றச்சாட்டு. எந்த வர்த்தகத் துறையிலும், போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிற மாதிரி அதிரடியாகச் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். அரசின் அலட்சியமோ, நிர்வாகத்தின் தாமதமோ, அத்தகைய செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கலாம். அரசின் அலட்சியத்துக்கும், நிர்வாகத்தின் தாமதங்களுக்கும் உள்நோக்கம் இருந்ததா இல்லையா என்பது குறித்து இன்னும் விவரமாகப் பேசியாக வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோவை சந்தையின் லீடராக ஆக்குவதற்காகத்தான் இதெல்லாம் நடந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடிய அத்தனை உயரதிகாரிகளையும் கூண்டில் நிறுத்தியாக வேண்டும். ரிலையன்ஸ் என்பது இந்திய வர்த்தக நிறுவனம். அம்பானி என்கிற பெருமுதலாளியின் குழந்தை. பி.எஸ்.என்.எல் அப்படியல்ல! அது, இந்தியாவின் குழந்தை. அதைக் கொல்ல யார் முயன்றிருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

இரண்டாயிரத்தில், அப்போது அமைச்சராக இருந்த அருண் ஷோரியை டெல்லியில் மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ராமனுடன் சந்தித்த போது, அவரிடம் கேட்ட ஒரு நியாயமான கேள்வி இப்போது நினைவுக்கு வருகிறது. என் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு புன்னகையோடு நழுவிவிட்டார் அவர். அப்போது, அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் துறை அவரிடம் இருந்தது. அப்படியொரு துறை நேருவின் பாரதத்தில் அமைக்கப்பட்டதெல்லாம், நாட்டின் சாபக்கேடு.

எந்தப் பொதுத்துறை நிறுவனமும் அதன் ஊழியர்களால் வீழ்வதில்லை, அரசு அல்லது அந்த நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரிகளால் தான் வீழ்கிறது – என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. ஊழியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைகளாலோ, வேலை நிறுத்தங்களாலோ, கவனக் குறைவுகளாலோ ஒரு பொதுத்துறை நிறுவனம் வீழ்ந்து விடுமென்றால், அதன் நிர்வாகப் பொறுப்பைக் கையில் வைத்திருக்கிற ஓர் உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது அவருக்கு இணையான அதிகாரி, நிர்வாகத் திறமை சிறிதும் இல்லாத நிர்வாகி. அல்லது, ஊழல் நிர்வாகி. இதைத்தான் அருண் ஷோரியிடம் கேட்டேன்.

“ஒரு பொதுத்துறை நிறுவனம் கடுமையாக நஷ்டமடைந்து மூடப்படுகிற நிலையை எட்டுகிறபோது, அதன் ஊழியர்கள் வேலையிழக்கின்றனர். அவர்களுக்கு, கூடக் குறைய எதையோ கொடுத்து நிர்கதியாக வெளியேற்றுகிறது அரசு. அதே அரசு, அந்த நிறுவனத்தின் தோல்விக்கு முழுமுதற்காரணமான உயர் அதிகாரிகளை, அதைக்காட்டிலும் உயர் பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கிறது…. இது என்ன நியாயம்” என்கிற என் கேள்விக்குத்தான், ஷோரி புன்னகை பூத்தார்.

தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையாலும், நேர்மையின்மையாலும், பொறுப்பின்மையாலும், ஒரு நிறுவனத்துக்கு மூடுவிழா நடத்தி முடிக்கிற  ஓர் உயர் அதிகாரியை, இன்னொரு நிறுவனத்தையும் இழுத்து மூடுவதற்காக அங்கே அனுப்புகிறார்களா? இன்றுவரை இந்தக் கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கேள்வியை இப்போது பி.எஸ்.என்.எல் விஷயத்திலும் எழுப்பியாக வேண்டும். பி.எஸ்.என்.எல் -ன் தோல்விக்கு அதன் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களைக் காட்டிலும், விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சில அதிகாரிகள் அல்லது அவர்களை வழிநடத்துகிற அமைச்சர்கள்தான் காரணமாக இருப்பார்கள், இருக்கிறார்கள், இருக்க வேண்டும். இதில் சந்தேகமேயில்லை. “பி.எஸ்.என்.எல் வருமானத்தில் 70 சதவிகிதம், ஊழியர்களின் சம்பளத்துக்கே போய்விடுகிறது” என்கிற ஒப்பாரியும், “ஊழியர்களின் சராசரி வயது 55… அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு நவீன தொழில் நுட்ப அறிவு கிடையாது” என்று முனகுவதும், யாரையோ யாரோ காப்பாற்றுவதற்கான வேலை.

உயர் பொறுப்பில் இருந்த… இருக்கிற… நிர்வாக அதிகாரிகள், நவீன தொழில் நுட்பங்களில் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு முறைப்படி பயிற்சியளிக்காமல் இருந்திருந்தால், அதற்காக அவர்கள்மீதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு பி.எஸ்.என்.எல் போட்டி போட்டுவிடக் கூடாது என்கிற உள்நோக்கத்தோடு, நவீனப்படுத்துகிற பொறுப்பை அவர்கள்  தட்டிக் கழித்தார்களா என்று விசாரிக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஊழியர்கள் மீது பழிசுமத்தி, இந்தியாவின் குழந்தையை தனியார் நலனுக்காகப் பலி கொடுக்க நினைத்தால், அதுதான் தேசத் துரோகம்.

அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ தங்களது பூர்வீகச் சொத்தை விற்று பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை ஆரம்பிக்கவில்லை.  மக்களின் வியர்வையிலிருந்து வசூலித்த  வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்டது அது. நாடெங்கும் உயர் கோபுரங்களைச் சொந்தமாக வைத்திருக்கிற அதன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான்  சிக்னல் கிடைக்க மாட்டேனென்கிறது என்றால், உண்மையான குற்றவாளிகள் யார்? அவர்களைக் களையெடுத்து, பி.எஸ்.என்.எல் -ஐக் காப்பாற்றுவதுதான் முக்கியம். அதற்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு யார் காரணம் என்பதை ஆய்ந்தறிந்து, அந்த இழப்புகளை அவர்களிடமிருந்தே வசூலித்து BSNL கணக்கில் சேர்ப்பவர்கள்தான் உண்மையான தேச பக்தர்களாக இருக்க முடியும். அதைச் செய்யாமல்,  பி.எஸ்.என்.எல் -ன் சொத்துபத்துக்களையெல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டுத் தலைமுழுகிவிட வேண்டியதுதான் என்று போதிக்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்தான் ‘ஆன்டி இண்டியன்ஸ்’.

இதை எழுதுவதற்கு எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நியாயமான  காரணம் இருக்கிறது. நான் BSNL அலைபேசி  இணைப்புத்தான் வைத்திருக்கிறேன், இப்போதும்! எல்லா இடங்களையும் போலவே, நான் இருக்கிற இடத்திலும் சிக்னல் கிடைப்பதில்லை. ‘நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்’ என்கிற குரலைக் கேட்டுக் கேட்டு, செவிகள் மரத்துவிட்டன. ஒவ்வொரு முறையும் அலைபேசியில் பேசுவதற்கு, சிக்னலுக்காகத் தெருவில் போய் நிற்க வேண்டியிருக்கிறது. நண்பர்களில் பலர், ஜியோவுக்கு மாறிவிடச் சொல்கிறார்கள். சிக்னல் கிடைப்பதில் சிக்கல் இருந்தாலும், இந்த இந்தியக் குழந்தையை விட்டுவிட மனம் வரவில்லை.

நண்பர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்வதை, இப்போது சில ஊடகங்களே சொல்கின்றன. சொல்கின்றன – என்று சொல்வதை விட, ‘அறிவுறுத்துகின்றன’ என்று சொல்வதுதான் சரி. பி.எஸ்.என்.எல் -க்கு அற்ப ஆயுள், அதற்கு பால் ஊற்றுகிற வேளை நெருங்கிவிட்டது என்றெல்லாம் அச்சுறுத்தும் அந்த ஊடகங்கள், ‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை விட்டொழியுங்கள்’என்று போதிக்கின்றன. அவர்களின் செல்லரித்துப் போன தேச பக்தியைப் பார்த்துப் புல்லரித்துப் போன நிலையில்தான் இதை எழுதுகிறேன்.

இப்போது மட்டுமில்லை, இந்த ஆண்டுத் தொடக்கத்திலும் இதே போன்ற குரல்கள் கேட்டன. பிப்ரவரி மாத ஊதியத்தை ஊழியர்களுக்குக் கொடுக்க முடியாமல் பி.எஸ்.என்.எல் தடுமாறுகிறது என்கிற செய்தி வேகமாகப் பரவியது. அலுவலகக் கட்டடங்களுக்கான மாத வாடகை, உயர்கோபுரம் அமைந்துள்ள இடங்களுக்கான வாடகையெல்லாம் கொடுக்கப்படவில்லை என்றார்கள். இப்போதும் அதே நிலைதான்.

சில மாதங்களுக்கு முன் வெளியான தகவல் தொடர்புத் துறையின்  அறிக்கை, சென்ற ஆண்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 3500 கோடி நஷ்டம் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டுக்கு 10,000 கோடி லாபம் பார்த்த நிறுவனம் அது. இப்போது 13,000 கோடி கடனில் இருக்கிறது.  இது, சர்வநிச்சயமாக, நிர்வாக ரீதியான தோல்வி. நமது தெருவில் கடப்பாரையோடு நின்று வியர்வை சிந்த வேலை செய்துகொண்டிருக்கிற பி.எஸ்.என்.எல் ஊழியருக்கு இந்தத் தோல்வியில் எந்தப் பங்கும் இல்லை.

தனியாரோடு ஒப்பிட்டால் மிக மோசமான சேவை, மிகவும் பின்தங்கிய தொழில்நுட்பம், 5-ஜி-க்கு தனியார் போனபிறகும் 4-ஜி-க்கே பி.எஸ்.என்.எல் தடுமாறுகிறது  – என்றெல்லாம் பேசுகிற ஊடகங்கள், அதற்குக் காரணமான குற்றவாளிகள் யாரென்பதை முதலில் அம்பலப்படுத்த வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.

சந்தையில் நம்பர் ஒன் நிறுவனமாக இருந்த ஓர் அரசு நிறுவனத்தை இந்த அளவுக்கு வீழ்த்தியவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிவதை விட்டுவிட்டு, ‘கடையை மூடிவிடலாம்’ என்று கதைப்பது கயமைத்தனம். நாட்டு மக்களை நேசிக்கும் எவரும் இதை அனுமதிக்கக் கூடாது.

கனெக்டிங் இண்டியா(CONNECTING INDIA) என்பது பி.எஸ்.என்.எல் உருவாக்கிய மாயையோ, வெற்றுக் கோஷமோ அல்ல! உண்மையாகவே அதுதான் இந்தியாவை இணைத்தது. “நதிகளாலும் மலைகளாலும் பிரிக்கப்பட்ட இந்தியாவை இணைப்பதில், காந்திக்கு இணையான இடம் இருப்புப் பாதைகளுக்கும் பி.எஸ்.என்.எல் -க்கும் இருக்கிறது” என்பது நகைச்சுவைக்காகச் சொல்லப்படுவதல்ல, அதில் பெருமளவு உண்மையும் இருக்கிறது. அந்தப் பேருண்மையை நாம் கட்டிக் காப்பாற்றியாக வேண்டும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *