BREAKING NEWS

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கியது. இங்குள்ள பிரதான தீவான லூஜனுக்கு வடக்கே குறைந்த மக்கள் தொகையே கொண்ட சிறிய தீவான படானேஸை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. குறிப்பாக, இத்பயாத் நகரின் வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில் 12 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 4.16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 5.4 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்தன. அதிகாலை வேளையில் தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். சில இடங்களில் சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

எனினும், அதிகாலை என்பதால், பலர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, சுன்னாம்பு களவையால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக மேயர் ரவுல்டி.சாகன் தெரிவித்துள்ளார். மேலும், இடிபாடுகளில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியில் காலை 7.38 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. 2 மணி நேர இடைவெளியில், 9 மணியளவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.4 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பஸ்கோ மற்றும் சப்தங் நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply