தற்போதைய செய்திகள்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை, மே 15-

தமிழ் இலக்கியத்தின் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இலக்கியத்தின் பல்வேறு படைப்புகளை உருவாக்கியவரும், திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன் கடும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர்  சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்:

பிரபல எழுத்தாளரும், நாவல் ஆசிரியருமான பாலகுமாரன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். அவரது பிரிவை தாங்கும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் அளித்திடவும், அவரது ஆன்மா நற்கதியடையவும் அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:

தமிழ் இலக்கியத்தில் தனித்துவத்தைப் பெற்றிருந்த எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். பாலகுமாரனின் படைப்புக்களில் தனி மனிதனின் வாழ்வு மேம்பட்டால்தான் சமூகமும், நாடும் உயர்ந்தோங்கும் என்பது மைய இழையாக இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களின் கருத்துக்கள் தோய்ந்ததாக அவருடைய நாவல்கள் இருந்தது. பாலகுமாரனின் படைப்புத் திறனைக் காலம் காலமாகப் பேசும் வகையில் உடையார் எனும் நாவல் விளங்குகிறது. ஆன்மீகச் சிந்தனைகள் அடங்கிய பல படைப்புக்களை வழங்கியவர் பாலகுமாரன் என்பதும் அவருக்கு உரிய தனிச் சிறப்பு ஆகும்.

த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன்:

தமிழ் மொழிப்பற்று, மொழியின் வடிவத்தன்மை என பன்முகத்தன்மை கொண்ட பாலகுமாரன் மறைவு வருத்தமளிக்கிறது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தன்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டவர். இதன் மூலம் தமிழ் மொழியின் சிறப்பை உலகம் அறியச் செய்தார். அவரது மறைவு அவரது குடும்பத்துக்கும், எழுத்தாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் பேரிழப்பாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply