BREAKING NEWS

பிரதமர் மோடியை சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார் ரூ.10 லட்சம் மத்திய அரசு பரிசு அளித்தது

உலகபாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பி.வி. சிந்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பி.வி.சிந்து-நஸோமி ஓகுஹரா நேற்று முன்தினம் மோதினர். கடந்த 2 ஆண்டுகளிலும் இறுதிப் போட்டியில் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்திருந்த சிந்து, இம்முறை தங்கம் வெல்லும் முனைப்புடன் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார்.

அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓகுஹரா ஸ்தம்பித்து நிற்க, முதல் செட்டை 21-7 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த அவர் 21-7, 21-7 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி வெறும் 38 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்துள்ள சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு துறை பிரபலங்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, நேற்று டெல்லி வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூயை நேரில் சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். வரலாறு படைத்ததன் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் பி.வி.சிந்து என்று கிரண் ரிஜிஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.

எதிர்காலத்திலும் பல போட்டிகளில் பி.வி.சிந்து வெற்றி பெற்று இந்தியாவுக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்தார். மேலும், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை பி.வி.சிந்துவிடம் மத்திய அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வழங்கினார்.

இந்நிலையில், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மோடி, ” இந்திய நாட்டுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்து இருக்கிறாய்” என கூறி பாராட்டினார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தாவது:- இந்தியாவின் பெருமை, ஒரு தங்கத்தையும் ஏராளமான பெருமையையும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த சாம்பியன் பி.வி.சிந்து. அவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.




Leave a Reply