தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

 

கர்நாடக தேர்தல் வெற்றி

சென்னை, மே 15-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிடப்பட்டு இருந்தது.

துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ இந்த மகிழ்ச்சியான தருணத்தில், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.வின் கணிசமான வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்று வாழ்த்து கூறியுள்ளார்.

நல்ல தீர்ப்பு

இந்தநிலையில் சென்னையில் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டுக்கும், பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கும் மக்கள் ஆதரவு தெரிவிப்பதாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளேன்.

காவிரி நீரை பெறுவதற்கு எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அம்மா காலம் வரை எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் உயிரோட்டமாக உள்ளது என்பதை அனைவரும் அறிவர். இப்போது காவிரி பிரச்சினை விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று விட்டது.

எதிர்க்கட்சிகள்

மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது. அதன் சாதக பாதகங்களை கூறுமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் உறுதியாக கிடைக்கும். நல்ல தீர்வு வரும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் கடமை மத்திய அரசுக்கு உண்டு.சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினாலும் அரசு சார்பில் உரிய பதிலை அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply