BREAKING NEWS

பிரதமர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்துக்கு தடை

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கடந்த 15-ம் தேதி கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முக்கியமாக, நாட்டில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மக்கள் முயற்சி எடுக்க வேண்டும். வரும் அக்டோபர் 2ம் தேதி முதல், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். நமது பல பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள். இதற்கான தீர்வு நம்பிடம் இருந்துதான் வர வேண்டும். வீட்டிலோ, ரோட்டிலோ, பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால், அதை உங்கள் பகுதியில் உள்ள துப்புரவு ஊழியர்கள் அகற்ற உதவ வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் சுத்திகரிப்பு வழி முறைக்கு, தொழிலதிபர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாடிய போதும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க ஒரு மக்கள் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனை வரும் தேசபிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கூறினார். இதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலிவுட் நடிகர் அமீர் கான் உள்ளிட்டோர் டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்தனர்.

பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியின் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருப்பது நம் அனைவரின் முடிவில் தான் இருக்கிறது எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply