BREAKING NEWS

பிரதமருடனான சந்திப்பின் மூலம் காவிரி விவகாரத்தில் குமாரசாமி புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

 

பிரதமருடான சந்திப்பின் மூலம், கர்நாடக முதல்வர் குமாரசாமி காவிரி விவகாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமாரசாமிக்கு கண்டனம்

காவிரி நதிநீர் ஆணையத்திற்கு பிரதிநிதியை நியமிப்பதில் காலம் தாழ்த்திவிட்டு, டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரி வரைவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடமும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிட்டிருக்கிறேன் என்று தேவையில்லாத ஒன்றைக் கூறியிருப்பதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

எதிர்மறை அணுகுமுறை

காவிரி வரைவுத் திட்டம் கர்நாடக அரசுக்கும் அளிக்கப்பட்டு, அந்த மாநில அரசு கூறிய சில திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இறுதியில்தான் உச்சநீதிமன்றம் காவிரி வரைவுத் திட்டத்தை உறுதி செய்து, காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜூன் 1ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், கர்நாடக முதல்வர் தற்போது முன் வைக்கும் வாதங்கள் எல்லாம், முன்பே உச்சநீதிமன்றத்தின் நிராகரிக்கப்பட்ட வாதங்கள். இருபது நாட்களுக்கும் மேலாக, தங்கள் மாநிலப் பிரதிநிதியின் பெயரை மத்திய அரசுக்கு அளிக்காமல், வேண்டுமென்றே வழக்கம்போல் தாமதம் செய்யும் போக்கைப் பின்பற்றி வருகிறது கர்நாடக அரசு.

மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடப் போகிறோம் என்று கர்நாடக முதல்வர் புதிய பிரச்சினைகளை கிளப்பியிருப்பது, அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அளித்த பேட்டிகளுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கில், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க விடாமல், பின்னடைவு செய்யும் நோக்கத்துடன் முடக்கி வைக்கும் போக்கை கர்நாடக முதல்வர் மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது சித்தராமைய்யா பின்பற்றிய எதிர்மறை அணுகுமுறையின் தொடர்கதையாக தெரிகிறது.

மத்திய அரசின் ஓரவஞ்சனை

தமிழக முதல்வரையும், தமிழக எதிர்க்கட்சிகளையும் காவிரிப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு சந்திக்க மறுத்த பிரதமரும், நீர் வளத்துறை அமைச்சரும் கர்நாடக முதல்வரை சந்திப்பதற்கு மட்டும் நேரம் ஒதுக்கி சந்திக்கிறார்கள். இது தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் பிரதமர் ஒரு பொருட்டாகவே கருதிடவில்லை என்பதை புலப்படுத்துகிறது.

இந்தச் சந்திப்பின் மூலமாக, கர்நாடக முதல்வர் காவிரியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு, மத்தியில் உள்ளவர்கள் விரும்பி துணை போயிருக்கிறார்கள் என்பது வேதனையளிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் லாபத்தை மனதில் கொண்டு, கர்நாடக அரசுடன் இணக்கமாகச் செயல்படுவது, மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் ஓரவஞ்சனையை வெளிப்படுத்துகிறது.

உறுதி செய்ய வேண்டும்

ஆகவே, கர்நாடக அரசு இனி தாமதிக்காமல் தனது மாநிலத்திற்கான பிரதிநிதியின் பெயரை மத்திய அரசுக்கு உடனடியாக அளித்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதற்கு ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள அதிகாரத்தின் கீழ், கர்நாடக மாநில அரசிடமிருந்து பிரதிநிதியின் பெயரைப் பெற வேண்டும். கர்நாடக அரசு பெயரைக் கொடுக்கத் தவறினால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply