BREAKING NEWS

பிபா உலகக்கோப்பை கால்பந்து 2018  – நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்திய மெக்சிகோ.

 

உலக கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனியை 1-0 என்ற கோல்கணக்கில் மெக்சிகோ அணி வீழ்த்தியது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா அணி கோஸ்டா ரிகா அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு உலக சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஜெர்மனி – மெக்சிகோ அணிகள் மோதின.

ரசிகர்கள் ஏமாற்றம்

தொடக்கத்திலிருந்தே ஜெர்மனி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மெக்சிகோ அணியினும் ஆடினர். 8-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்க கிடைத்த ப்ரி கிக் வாய்ப்பில் அந்த அணி வீரர் மிக்யூல் லயூன் அடித்த ஷாட் கம்பத்திற்கு மேலாக சென்றது. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

மெக்சிகோ முன்னிலை

இந்நிலையில், முதல் பாதி நேர ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஹிர்விங் லொசானோ, சக வீரர் கடத்தி தந்த பந்தை ஜெர்மனியின் தடுப்பாட்ட ஆட்டக்காரர்களை எல்லாம் கடந்து கோல் அடித்தார். அவர் கோல் அடித்தவுடன் ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர். இதனால், முதல் பாதியில் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது.

ஜெர்மனி தோல்வி

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க முயன்றனர். ஆனால், மெக்சிகோவின் வலுவான தடுப்பு வளையத்தை அவர்களால் கடக்க முடியவில்லை. அவர்கள் கடக்க முயன்று கோலாக்க முயலும்போது அனுபவம் வாய்ந்த மெக்சிகோ கோல் கீப்பர் பாய்ந்து சென்று பந்தை பிடித்து அவர்களது எண்ணத்தை தவிடுபொடியாக்கினார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

—-

ஜெயர்மனி பயிற்சியாளர் அதிருப்தி(பாக்ஸ்)

—–

நடப்பு சாம்பியனான ஜெர்மனி தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 1982-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி தோற்பது இது முதல் முறையாகும். இந்த தோல்வியால் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோசிம் லொய் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறுகையில் ‘முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆட்டம் மோசமாக இருந்தது. நாங்கள் கோலை நோக்கி பல ஷாட்டுகள் அடித்தோம். ஆனால் அதிர்ஷ்டம் இல்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தாக்குதல் மற்றும் பந்தை கடத்துவதில் திறமையாக செயல்படவில்லை. முதல் ஆட்டத்தில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். ஜெர்மனி அணி தோல்வியிலிருந்து மீண்டு வரும் திறமை வாய்ந்தது. அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறும்’ என்றார்.




Leave a Reply