BREAKING NEWS

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் திட்டமா? லாலுவிடம் உடல்நலம் விசாரிப்பு.

 


லாலு பிரசாத் யாதவை போனில் தொடர்பு கொண்டு பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் உடல் நலம் குறித்து விசாரித்தால் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்து விலகுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் தொடக்கத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்தார். பா.ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகினார்.

கடந்த சட்டசபை தேர்தலில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்று ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைத்தார். அவரே மீண்டும் முதல்வர் ஆனார்.

இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்படவே இந்த கூட்டணியில் இருந்து விலகினார். மீண்டும் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார்.

பா.ஜனதவுடன் கருத்து வேறுபாடு?

இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, அவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணியில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளார். சமீபத்தில் பா.ஜனதா நடத்திய சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

மும்பையில் இருதய நோய் சிகிச்சை ஆஸ்பத்திரியில் தங்கியிருக்கும் லாலு பிரசாத் யாதவுடன் போனில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவரது இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் அவர் லாலு பிரசாத் யாதவ் கூட்டணியில் மீண்டும் இணைவது உறுதியாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நிதிஷ்குமாரின் இந்த முடிவை ராஷ்டீரிய ஜனதா தளமும், காங்கிரசும் வரவேற்றுள்ளன. ஆனால் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.




Leave a Reply