பாத்திமா தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி.வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-பெண்கள் வழிபாட்டு உரிமை சபரிமலை விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆகையால் அது குறித்து பேசக்கூடாது. ஆனால், பெண்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த ஆண்டு சபரிமலை பிரச்சனையின்போது வழிபாடுக்குச் சென்ற பெண்களுக்கு கேரள மாநில அரசு பாதுகாப்பு அளித்தது.
இந்நிலையில் தற்போது முன்பதிவு செய்துள்ள பெண்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு கேரள அரசு செய்யும் என நான் நம்புகிறேன். சி.பி.ஐ. விசாரணை தேவை சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை யார் என்றும் கூறி இருக்கிறார். ஆனால் இதுவரையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.
இவ்வாறாக நடப்பது முதல் முறை அல்ல. சென்னையில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உயர்கல்வி மாணவர்களுக்கு இப்படிடயான மன உளைச்சல் ஏற்படுவது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும். உயர் கல்வியில் மாணவ மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். பாத்திமா தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.