BREAKING NEWS

பாங்காக்கில் தொடர்ந்து 3 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால் பரபரப்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த சிறிய ரக குண்டு வெடிப்பில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் ஆசிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், அங்கு மூன்று இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை சரியாக 9 மணியளவில், அதாவது சிங்கப்பூர் நேரப்படி சரியாக 10 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோங் பகுதியில் உள்ள மாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே ஒரு குண்டும், அதனருகில் மஹானகோன் கட்டிடத்தில் ஒரு குண்டும், மாடி ரயில்வே ஸ்டேஷனின் 2வது கேட் அருகில் மற்றொரு குண்டும் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 2 பேரையும் மீட்டனர்.

அதில் ஒருவரின் நிலை சிறிது மோசமாக இருந்ததால், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

மேலும் அப்பகுதியில் உள்ள இரண்டு ரயில்வே நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைக்கு அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான்ஓசா உத்தரவிட்டுள்ளார் என தாய்லாந்து அரசாங்க செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாங்காக்கில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு (ஆசியன்) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் பாம்பியோ உள்பட ஆசிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நடந்துள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Leave a Reply