தற்போதைய செய்திகள்

பள்ளிகள், கல்லூரிகள் முன்பு தமிழகம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

சென்னை,

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளின் முன்பு காவல்துறையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அஸ்வினி கொலை

சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது இதயம் அதிர்ந்தது. காவல்நிலையத்தில் அஸ்வினி அளித்த புகாருக்கு, உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த கொலையை தடுத்திருக்கலாம். ஆனால், அரசு விழாக்களுக்கு அளிக்கும் பாதுகாப்பிலேயே நேரத்தை செலவிடும் காவல்துறை, பொதுமக்கள், கல்லூரி வளாகங்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை. சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் அறிவித்தன் ஈரம் காய்வதற்குள், அஸ்வினியின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது கொடுமையானது.

பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

திருச்சியில் மகளிர் தினம் பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பாக உஷாவின் உயிர் பறிக்கப்பட்டது. மகளிர் தினத்துக்கு மறுநாள் அஸ்வினியின் உயிர்ப் பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாதுகாப்பும், சட்டம் –ஒழுங்கும் மோசமான நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் முன்பாக காவல்துறையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். பெண்கள் தொடர்பான புகார்களில் உரிய நேரத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காவலர் குறை தீர்ப்பு முகாம்களை

பயனுள்ள முறையில் நடத்த வேண்டும் (பாக்ஸ்)

தமிழக டி.ஜி.பி. தலைமையில் கடந்த மாதம் காவலர்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் காவல் துணை ஆய்வாளர் சதீஷ்குமார், காவலர் அருண்ராஜா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின், இந்த குறைதீர்ப்பு முகாம் என்பது வெறும் கண்துடைப்பா? காவலர் குறைதீர்ப்பு முகாம்களை பயனுள்ள முறையில் நடத்த வேண்டும். அவர்களின் மன குறைகளை கேட்டறிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Leave a Reply