தற்போதைய செய்திகள்

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு….

சென்னை,
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குளத்தில் மூழ்கி பலி

இதுகுறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், ஆர்.கோம்பை கிராமம், உட்கடை இருளக்கவுண்டன்பட்டியை சேர்ந்த யுவராணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கோகிலா ஆகியோர் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த முனுசாமி என்பவர் கட்டுமரத்தில் மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.
பேருந்து விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், வீரப்பட்டி கிராமம், வவ்வாநேறி பகுதியைச் சேர்ந்த ஜெயசூரியா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் ஆகியோர் ஊரணியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியிலிருந்து அன்னூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து நல்லாத்துப்பாலம் அருகில் விபத்துக்குள்ளானதில் அந்த பேருந்திலிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்டப்பன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கிட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
முதல்வர் இரங்கல்
மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply