தற்போதைய செய்திகள்
10604CNI_01

பல்கலைக்கழகங்களை இணைக்கும் நூலக இணையதளம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்…..

சென்னை, ஏப்.7-
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை இணைக்கும் வகையில் எண்ணியல் நூலக இணையதளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அறிவுசார்
தமிழகத்தை அறிவுசார் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், கிராமப்புற மாணவ மாணவிகள் உயர்கல்வி கற்று, வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடும் வகையிலும், ஜெயலலிதா வழியில் தமிழக அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு, கிராமப்புற மாணாக்கர்கள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி செல்ல சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே உயர்கல்வி கற்பதற்கு ஏதுவாக கடந்த ஏழு ஆண்டுகளில் 76 புதிய அரசு கல்லூரிகளை துவக்கியுள்ளதோடு, அரசு கல்லூரிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளது.

மாணவர் சேர்க்கை

இதன்மூலம், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு மாநிலம் 46.9 சதவிகிதத்தைப் பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தேனி மாவட்டம், கோட்டூரில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

புதிய கட்டிடங்கள்…

மேலும், சென்னை, மாநில கல்லூரியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுழைவு வளைவு, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்கள், திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர் குடியிருப்பு, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவாளர் குடியிருப்பு மற்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஞானவாணி வானொலி நிலையக் கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

புதிய இணையத்தளம்
மேலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிக்கு 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம், என மொத்தம் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தப்படி, 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு எண்ணியல் நூலக இணையதளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த இணையதளம் மூலம், உயர்கல்வித்துறையின் 13 பல்கலைக்கழக நூலகங்கள் மற்றும் அந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகள் இணைக்கப்படுவதால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இந்த எண்ணியல் நூலகத்தை பயன்படுத்தி மின்னணு புத்தகங்களை படித்திடவும், உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பகிர்ந்து கொள்ளவும் வழிவகை ஏற்படும்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உள்ளனர்.
Leave a Reply