BREAKING NEWS

பருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் –  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

 

பருவமழை பொழிவு குறைந்ததால், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 104 டிகிரிக்கு மிகாமல் வெப்பம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் என்கிற அக்னி நட்சத்திரம் காலத்தில், அவ்வப்போது கோடை மழை பெய்ததால், வெப்பளவு சற்று குறைந்தது. கத்திரி வெயில் முடிந்த மறுநாள் முதல் வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கியது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வடதமிழகத்தில் வெப்பம் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு 104 டிகிரிக்கு மிகாமல் வெப்பம் நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

லேசான மழை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

104 டிகிரி வெப்பம் நீடிப்பு

பருவமழை குறைந்ததால், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்படும். அதாவது 101 முதல் 104 டிகிரி வெப்பநிலை நீடிக்கும். அதிகபட்சம் 2 முதல் 3 செல்சியஸ் வெப்பம் அதிகளவு பதிவாகும்.

மீனவர்கள் கவனத்திற்கு..

தென்மேற்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் தென்தமிழக கடலோர பகுதியில் பலமான காற்று வீசும். அதேபேல, தென்மேற்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி மணிக்கு 45 கி.மீ., வேகத்தில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் பலமான காற்று வீசும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மழை விவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வேலுாரில் 2 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் எண்ணுார், கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா அலுவலகம், கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சின்னகல்லார், நெய்வேலியில் தலா ஒரு செ.மீ., மழை பெய்தது.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.




Leave a Reply