BREAKING NEWS

பரங்கிமலை மின்சார ரெயில் விபத்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – ரெயில்வே துறைக்கு தீர்ப்பாயம் உத்தரவு.


 

பரங்கிமலை ரெயில் நிலையத்தில், மின்சார ரெயிலில் சென்ற போது தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க ரெயிவேத்துறைக்கு சென்னை ரெயில்வே இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

படிகட்டு பயணம்

சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உயர்அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார ரெயில்கள் அனைத்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தடங்களில் இயக்கப்பட்டன.

இதனால் கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு காலை 7.05 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் மின்சார ரெயில் தாமதமாக காலை 7.40 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டது. இதனால் ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

தடுப்பு சுவர்

பரங்கிமலையில் வழக்கமாக 2-–வது நடைமேடையில் செல்ல வேண்டிய இந்த ரெயில் 4–-வது நடைமேடையில் சென்றது. அப்போது பட்டிக்கட்டில் பயணித்த பலர், ரெயில் நிலையத்தின் பக்கவாட்டில் இருந்த தடுப்பு சுவரில் மோதி தவறி விழுந்தனர்.

இதில் ரெயில் சக்கரங்களில் சிக்கி பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த நவீன்குமார் (23), கல்லூரி மாணவர் சிவக்குமார் (22), பள்ளி மாணவர் பரத் (17) உள்பட 4 பேர் உடல்சிதறி பலியானார்கள். மேலும் காயம் அடைந்த 5 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இழப்பீடு

இந்தநிலையில் சென்னை ரெயில்வே இழப்பீடு தீர்ப்பாயம் தாமாகவே முன் வந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தியது. அதில், பரங்கிமலை ரெயில் நிலையத்தில், மின்சார ரெயிலில் சென்ற போது தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.8 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விபத்து தொடர்பாக சேத்துப்பட்டில் உள்ள ரெயில்வே தீர்ப்பாயத்தை அணுகலாம் என்று கூடுதல் பதிவாளர் அருந்ததி கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அணுகாமல் தீர்ப்பாயமே முன்வந்து விசாரித்து இழப்பீடு தர உத்தரவிட்டது இதுவே முதல் முறை ஆகும்.




Leave a Reply