BREAKING NEWS

பண மதிப்பிழப்பு…மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா….?

 

 


நாட்டின் பெரும் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருக்கும் கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற அறிவிப்போடு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு தொலைக்காட்சி வாயிலாக ஆயிரம் ரூபாய் நோட்டு மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு அன்றைய தினம் இந்தியா முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் இன்னும் நமது மனதை விட்டு அகலவில்லை.

அன்றைய நள்ளிரவில் இருந்து கிட்டதட்ட 7-8 மாதங்களாக, மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிட, தங்களிடம் சொற்ப அளவில் இருந்த அந்த நோட்டுகளை கையில் வைத்துக் கொண்டு வங்கிகளின் வாசல்களில் தவம் இருந்த ஏழை-எளிய-நடுத்தர மக்களின் வேதனை இன்றளவில் கண்முன் வந்து போகிறது. இன்னும் சொல்லப்போனால் நூற்றுக்கும் அதிகமானவர்களின் உயிரையும் பறித்த கொடுமையும் நிகழ்ந்தது.

கருப்பு பணத்தை மீட்கவே, மேற்படி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த மத்திய அரசின் நிலையை இப்போது உன்னிப்பாக கவனித்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதற்கு காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கைத்தான்.

இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த அறிக்கையில், ‘‘விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயில், 15,310,73 கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளது.

ஆக, இந்த ரூ.10 ஆயிரத்து 720 கோடி பணத்தை ஒழித்திடவா, உயர் ரூபாய் நோட்டுகள் செல்லாத என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை படுகுழிக்கு தள்ளியது என்ற விமர்சனங்கள் நாடுமுழுவதும் எழுந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் ஏராளமான சிறு தொழில் மூடப்பட்டும், ஏராளமானவர்கள் வேலையை இழந்ததுதான் மிச்சம் என்று இன்னொரு பக்கம் வேதனையும்-குமுறலும் வெளிப்படுகின்றன.

‘‘வங்கிக்கு வராமல் உள்ள இந்த பணமும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கலாம். சிறிது பணம் தொலைந்தோ, அழிக்கப்பட்டோ இருக்கலாம். பணமதிப்பு நீக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை இழந்துள்ளது. இதனால் மட்டும் ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

ஆக, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நோக்கம் எந்த வகையிலும் நிறைவேறியதா என்றால்…..அது கேள்விக்குறித்தான். ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு புழக்கத்தில் இருந்தது. இந்த நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு எவ்வளவு நோட்டுகள் வங்கிகளுக்கு வந்தது என்ற கணக்கு என்பது இதுவரை ரகசியமாகவே இருக்கிறது. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்ட போதிலும், உண்மை நிலை என்ன என்பதை நாட்டுகள் தெரிந்து கொள்ள மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.




Leave a Reply