தற்போதைய செய்திகள்

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மாற்றங்களால்-தமிழகம் 10 முக்கிய சவால்களை சந்தித்து வருகிறது சட்டசபையில் துணை முதல்வர் தகவல்…..

சென்னை,

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பெருத்த மாற்றங்களால் தமிழகம் மிக முக்கியமான 10 சவால்களை எதிர்கொண்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்மாதிரி மாநிலம்

சட்டசபையில் நேற்று, 2018-2019-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசியதாவது:

ஜெயலலிதா தொடங்கி வைத்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. பொது சுகாதாரம், கல்வி, சமூகப் பாதுகாப்பு போன்ற துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், நமது மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளை உயர்த்தி, நாட்டிலேயே சமூகநலத்தைப் பேணிப் போற்றும் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஐயமில்லை 

கடல் அலை உயரும்போது அனைத்துப் படகுகளும் ஒருசேர உயர்வது போல், மாநிலத்தின் துரிதமான பொருளாதார வளர்ச்சி, அனைத்துக் குடும்பங்களின் பொருளாதார நிலையையும் ஒருசேர உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. எனினும், சமுதாயத்தில் அனைத்து மக்களின் வாழ்வையும் மேம்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, பொருளாதாரச் சம நிலையைக் கொண்டு வருவதற்காக, பல்வேறு நலத்திட்டங்களை, குறிப்பாக ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். எனவே, பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் ஊக்கம் தரும் அதே வேளையில், நலத்திட்டப் பணிகளும் இந்த அரசின் வளர்ச்சிக் கொள்கையில் தொடர்ந்து முக்கியத்துவத்தைப் பெறும்.

முக்கியமான கட்டம்

பல சவாலான சூழ்நிலைகளுக்கிடையே, இந்த வரவு-செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. பண மதிப்பிழப்பு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள பெருத்த மாற்றங்களைக் கடந்து, தொடர்ந்து முன்னேற வேண்டிய முக்கியக் கட்டத்தில் நமது பொருளாதாரம் உள்ளது.

10 சவால்கள்

இந்த முக்கியத் தருணத்தில், மாநிலம் சந்தித்து வரும் பல்வேறு சவால்கள்:
1. முதலீடுகளை ஈர்த்து, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்,

2. இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பிற்கான தகுதியை அவர்கள் பெறச் செய்தல்,

3. விவசாய உற்பத்தித் திறனையும், விவசாயிகளின் வருவாயையும் பெருக்குதல்,

4. நகர்ப்புரங்களில் அடிப்படை வசதிகளையும், உட்கட்டமைப்பையும் மேம்படுத்துதல்,

5. அனைவருக்கும் வீட்டுவசதி என்ற இலக்கை அடைய ஏழைகளுக்கு வீட்டுவசதி வழங்குதல்,
6 .நீர்நிலை உள்ளிட்ட இயற்கை ஆதாரங்களை பாதுகாத்துப் பராமரித்தல்,

7. நகர்ப்புரங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு,

8. கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதிகளின் தரத்தை மேம்படுத்தி, அவற்றை அனைவரும் எளிதாகப் பெற வழிவகை செய்தல்,

9. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதுடன், கடல் அரிப்பிலிருந்து கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்தல்,

10. குறைந்து வரும் மத்திய வரிப் பகிர்வு, சொந்த வரி, வரியல்லாத வருவாய் வரவினங்களில் உள்ள தற்போதைய சூழ்நிலையை சமாளித்து, நிதிநிலையை திறம்பட மேலாண்மை செய்தல்.

உத்திகள்

இந்த பத்து முக்கியச் சவால்களையும் எதிர்கொண்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, தமிழ்நாட்டை வளமான மாநிலமாக மாற்றச் செய்வதற்கான உத்திகளை உள்ளடக்கி இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply