தற்போதைய செய்திகள்
download (1)

பணத்துக்காக பெற்ற தாயை கொலை செய்த தஷ்வந்த்துக்கு 3 நாள் போலீஸ் காவல் மும்பை பாந்த்ரா நீதிமன்றம் அனுமதி…..

சென்னை, டிச.10-

பணத்துக்காக பெற்ற தாயையே கொலை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட தஷ்வந்த்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை பாந்த்ரா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிறுமி கொலை வழக்கு

போரூர் அருகே முகலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி ஹாசினியை (வயது 7) பக்கத்து வீட்டில் வசிக்கும் சேகர்- சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் பாலியல் பலாத்காரம் செய்து மிகக் கொடூரமான முறையில் பிஞ்சுக் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், பின்னர் பெற்றோரின் முயற்சியால் ஜாமீனில் வெளியே வந்தார்.

தாய் அடித்து கொலை

அதன்பிறகு போதைக்கு அடிமையாகி பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் தாய் சரளாவிடம் பணம் கேட்டு அவர் கொடுக்காததால் அவரது தலையில் இரும்பி கம்பியால் ஓங்கி அடித்து கொலை செய்துவிட்டு 25 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டார். சேகரின் புகாரின் பேரில் தஷ்வந்த்தை பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை விரைந்தனர்.

மீண்டும் கைது

அங்கு குதிரை பந்தயத்தை வேடிக்கை பார்க்க சென்ற போது மாறுவேடத்தில் இருந்த தமிழக சிறப்பு படை போலீஸார் தஷ்வந்த்தை கைது செய்தனர். இதையடுத்து சென்னைக்கு அழைத்து செல்வதற்காக அவரை மும்பை விமான நிலையத்துக்கு அழைத்து வந்த போது சிறுநீர் கழிப்பதற்காக கழிப்பறைக்கு செல்வதாக கூறிய தஷ்வந்த் போலீஸாரை தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்தார். கைவிலங்கின் மேல் துணியை சுற்றிக் கொண்டு உலா வந்த தஷ்வந்த்தை போலீஸார் மீண்டும் நேற்று கைது செய்தனர்.

போலீஸ் கஸ்டடி

நேற்று மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக சிறப்பு படையினர் மனுதாக்கல் செய்தனர். எனினும் தஷ்வந்த்தை 3 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ள மும்பை நீதிமன்றம் அவரை விசாரணைக்கு பின்னர் ஸ்ரீபெரும்பூதூர் நீதிமன்றத்தில் வரும் 12-ந் தேதி ஆஜர்படுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளது.
Leave a Reply