BREAKING NEWS

பசுமைவழிச் சாலை திட்ட விவகாரத்தில் அடக்குமுறை நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றி பெறாது – கம்யூனிஸ்டு கண்டனம்.

பசுமைவழிச் சாலைத் திட்ட விவகாரத்தில், அடக்குமுறை நடவடிக்கைகளை ஒருபோதும் வெற்றி பெறாது என்று இந்திய கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பசுமை வழிச்சாலை

தமிழக அரசு ஜனநாயகத்திற்கு புறம்பான முறையில், கடும் அடக்கு முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கண்டனத்திற்குரியது. விவசாய நிலங்களை அபகரித்து, சேலம் – சென்னை எட்டு வழிச் சாலையை அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதைக் கண்டு, விவசாயிகள் தங்களின் எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அடக்குமுறை

ஜனநாயகத்தின் மீது அரசுக்கு நம்பிக்கை இருந்தால், எதிர்ப்பு தெரிவிப்போரின் கருத்துகளைக் கேட்டு தீர்வு சொல்லவேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. ஆனால், அடக்குமுறை மூலம் விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். தூத்துக்குடியில் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்வதும், பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதும் கண்டனத்திற்குரியது.

வெற்றி பெறாது

தமிழக அரசு சர்வாதிகாரப் பாதையில் செல்லாமல், ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். அடக்குமுறை நடவடிக்கைகள் ஒரு போதும் வெற்றி பெறாது என்பதனை உணர்ந்து அப்பாவி மக்கள், விவசாய அமைப்பின் நிர்வாகிகள் மீது தொடுத்துள்ள அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply