BREAKING NEWS

பசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் நாளை மறுநாள் தி.மு.க. ஆர்ப்பாட்டம்.

சேலத்தில், பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

பசுமை வழிச்சாலை

சேலம்-சென்னை வழியாக பசுமைவழிச்சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் எதிர்ப்பு

சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மக்களிடம் முழுமையான கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, மக்கள் கருத்தை கேட்க வேண்டும் என்ற தி.மு.க. கோரிக்கையை அரசு கேட்கவில்லை.

ஆர்ப்பாட்டம்

ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை கைது செய்தால், போராட்டம் தொடரும் என்று எச்சரித்தும் முதல்வர் தன் சொந்த மாவட்ட மக்கள் மீது காவல்துறையின் அடக்குமுறையை நிறுத்தவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து, நாளை மறுநாள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply