தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே அதிக மின் வெளிச்சத்தால் மாணவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு பள்ளி விழாவில் பரபரப்பு…..

நெல்லை,

நெல்லை அருகே நடந்த பள்ளி விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த மின்விளக்கு வெளிச்சத்தால் மாணவர்கள் உள்பட பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது.

அலங்கார மின்விளக்குகள்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தபள்ளியில் ஆண்டுவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இதில் வைக்கப்பட்டிருந்த ஒரு சக்தி வாய்ந்த மின்விளக்கில் அதிகளவு ஒளி வெளிப்பட்டது. இதனால் சில மாணவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

இதுபற்றி மாணவ-மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறினர். இதைதொடர்ந்து உடனடியாக அந்த மின்விளக்கு அணைக்கப்பட்டது. பிறகு தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தது.

மாணவர்களுக்கு கண் எரிச்சல்

இந்தநிலையில் இரவில் 70 மாணவ-மாணவிகள் மற்றும் 30 பெற்றோர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிகளவு கண் எரிச்சல் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு கண்ணில் வீக்கம் காணப்பட்டது.
இதை தொடர்ந்து அவர்கள் அவர்கள் அனைவரும் நேற்று நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு

இதுபற்றி அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் நெல்லை மருத்துவமனையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply