தற்போதைய செய்திகள்

நீரவ் மோடியை தொடர்ந்து தமிழகத்திலும் கைவரிசை:14 வங்கிகளில் ரூ.824 கோடி சுருட்டிய தொழில் அதிபர் இந்திய ஸ்டேட் வங்கி, சி.பி.ஐ.யிடம் புகார்…….

சென்னை,
பஞ்சாப் தேசிய வங்கியில், போலியான ஆதாரங்களை சமர்ப்பித்து ரூ.11 ஆயிரத்து 400 சுருட்டியவர் நீரவ் மோடி. இவரை தொடந்து 14 வங்கிகளில் ரூ.824 கோடி அளவிற்கு கடன் பெற்று, சென்னையை சேர்ந்த வட இந்திய தொழில் அதிபர் ஒருவர் திருப்பி செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருவது வெளியாகி உள்ளது. இதுகுறித்து தற்போது மத்திய புலனாய்வு குழுவிடம் (சி.பி.ஐ.) இந்திய ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) புகார் அளித்து உள்ளது.
எஸ்.பி.ஐ. புகார்
சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு நகை தயாரிப்பு நிறுவனம் ரூ.824 கோடியே 15 லட்சம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டதாக சிபிஐயிடம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி(எஸ்பிஐ) கூட்டமைப்பு 16 பக்க புகார் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.215 கோடி கடன் பெற்று அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறது.
இது தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சென்னை மண்டலத்தின் பொது மேலாளர் ஜி.டி. சந்திரசேகர் சிபிஐ இணை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கனிஷ்க் கோல்டு
சென்னை தி.நகரில் கனிஷ் கோல்டு பிரைவேட் லிமிட் (கே.ஜி.பி.எல்.) என்ற தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கம்பெனிச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக உரிமையாளர்களாக நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் வசிக்கும் பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிறுவனம் கிரிஸ் (KRIZZ) என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள பக்கத்துரை, நடராஜபுரம் கிராமங்களில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் தயாரிக்கும் நகைகள் சில்லறை விலையில் மக்களுக்கும், சில மிகப் பெரிய நகைக்கடைக்களுக்கும் செய்து கொடுத்து வந்துள்ளது.
கடன் விவரம்
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள் கனிஷ் கோல்டு நிறுவனத்துக்கு ரூ. 747 கோடி கடன் அளித்தன. இதில் அதிகபட்சமாக ஸ்டேட் வங்கி ரூ.215 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.115 கோடி, பேங்க் ஆப் இந்தியா ரூ.45 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ரூ.20 கோடி, கார்பரேஷன் பேங்க் ரூ.20 கோடி, பேங்க் ஆப் பரோடா ரூ.30 கோடி, ஐடிபிஐ பேங்க் ரூ.45 கோடி, தமிழ்நாடு மெர்கண்டைல்வங்கி ரூ.37 கோடி, சின்டிகேட் வங்கி ரூ.50 கோடி, எச்டிஎப்சி வங்கி ரூ.25 கோடி, ஐசிஐசிஐ வங்கி ரூ.25 கோடி, ஆந்திரா வங்கி ரூ.30, யூசிஓ வங்கி ரூ.40 கோடி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.50 கோடி என மொத்தம் ரூ.747 கோடி கடன் அளிக்கப்பட்டது.
இந்தக் கடனுக்காக கனிஷ் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் இருந்து பல்வேறு சொத்துகளின் உறுதிப் பத்திரம் (கொலேட்ரல் செக்யூரிட்டி) பெறப்பட்டன. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கடன் கொடுத்த வங்கிகளில் 8 வங்கிகளுக்கு முறையாக கனிஷ் கோல்டு நிறுவனம் வட்டியையும், அசல் பணத்தையும் செலுத்தவில்லை.
அதிர்ச்சி தகவல்கள்
இது ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து வங்கிகளுக்கும் தொடர்ந்து எந்த வங்கிக்கும் வட்டியை செலுத்தாமல் இருந்து வந்தது. இதுதொடர்பாக கனிஷ் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களை வங்கிகளின் சார்பாக தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. மேலும் அந்த நிறுவனத்திடம் இருக்கும் இருப்பு நகைகள் குறித்த எந்தவிவரத்தையும் ஆடிட் செய்யவும் அனுமதி கிடைக்கவில்லை.
மேலும் வங்கிக் கூட்டமைப்பு அதிகாரிகள் தரப்பில் கனிஷ் கோல்டு நிறுவனத்தின் அலுவலகம், நகைகள் தயாரிப்புக் கூடம், ஷோரூம் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது அது செயல்படா நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து கனிஷ் கோல் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் ஜெயின் நகை இருப்பு விவரம் குறித்து போலியான ஆவணங்களைக் கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் ஆய்வு நடத்தியபோது, நகை தயாரிப்பு கூடத்தில் எந்தவிதமான செயல்பாடும் இல்லாமலும், எந்தவிதமான இருப்பும் இல்லை. இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தடயவியல் ஆடிட்டிங் நடத்தப்பட்டது.
அதிர்ச்சி தகவல்கள்
இந்த ஆய்வில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டு வரை போலியான ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள், வங்கிப் பணத்தை மாற்றியது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அனைத்தும் போலி மேலும் நகைகள் தயாரிக்கப்பட்டு எங்கு செல்கின்றன, யாருக்கு விற்பனையாகின்றன என்பது குறித்த ஆவணங்கள் இல்லை, நகைகள் இருப்பு வைத்த விதத்திலும், விற்பனை செய்த விதத்திலும் போலியான பில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிதி ஆண்டும் இருப்பு குறித்த ஆடிட்டிங் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
கனிஷ் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் போலியாக ஆவணங்கள் தயாரித்து நிறுவனத்தின் லாபத்தை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர். இது கடன் கொடுத்த வங்கிகளை மோசடி செய்ததாகும். மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடன் கொடுத்த வங்கிகளுக்கு வட்டியும், அசல் தொகையும் செலுத்தாமல் ஏமாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகளிடம் பெற்ற கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் ரூ.824 கோடியே 15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கடன் கொடுக்கப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் (பாக்ஸ்)


2008-ம் ஆண்டு கனிஷ் கோல்டு நிறுவனத்துக்காக எஸ்.பி.ஐ. வங்கியின் சார்பில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடம் ரூ. 50 கோடி கடன் தர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு இந்த நிறுவனத்துக்காக பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளிடமும் கடன் பெற ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் சந்தைகளில் தங்கம் வாங்கி வர்த்தகத்தில் கனிஷ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகள், வருவாய், செலவுகள், விற்றுமுதல், லாபம், இருப்பு நகைகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வந்தன. இதற்காக முறைப்படியான ஆடிட்டர்களை அந்த நிறுவனம் நியமித்து கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் லாபம், இருப்பு நகைகள், வருவாய், வரவு செலவு, விற்றுமுதல் ஆகியவை படிப்படியாக அதிகரித்து வந்ததாகவே கடந்த 2007-08ம் ஆண்டு முதல் முதல் 2015-16ம் ஆண்டு வரை கணக்குகள் காட்டப்பட்டன. இதன் அடிப்படையிலேயே அடுத்தடுத்து புதிய கடன்களும் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply