தற்போதைய செய்திகள்
eps

நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததும்,குறைந்த விலையில் தரமான மணல் ,பேரவையில் முதல்வர் மீண்டும் உறுதி..

சென்னை, ஜன.12-
நீதிமன்றத்தில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். அந்த வகையில் பொதுமக்களுக்கு தரமான மணல் குறைந்த விலையில் வழங்கப்படும் என்று பேரவையில் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
காங்கிரஸ் கோரிக்கை
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி பங்கேற்று பேசும் போது, ‘தமிழகத்தில் மணல் பிரச்னை நிலவுகிறது. பொது மக்களுக்கு தரமான மணல் கிடைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
விதிகளுக்கு உட்பட்டு
அப்போது, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கீட்டு பேசியதாவது:
தரமற்ற மணல் இறக்குமதி செய்கின்ற காரணத்தினாலே பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அதற்குத்தான் பல விதிகளுக்கு உட்பட்டு மணல் இறக்குமதி செய்யப்படவேண்டுமென்று இரண்டு, மூன்று தினங்களுக்கு அரசின் சார்பாக வெளியிட்டிருக்கின்றோம். ஆகவே, எவைகளையெல்லாம் பின்பற்றவேண்டும், அதை விற்பனை செய்வது, அரசாங்கத்தின் மூலமாக விற்பனை செய்யவேண்டுமென்பது குறித்து நீதிமன்றத்திலே வழக்கு இருக்கின்றது.
அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தீர்ப்பு வந்தபிறகு மணல் அனைவருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். இது குறித்து 2 வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக மணல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.
நம்புகிறோம்
இரண்டு வழங்குகளின் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றோம். அப்படிக் கிடைக்கும்பொழுது, புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட்டு, ஏற்கனவே இருக்கின்ற மணல் குவாரிகள் இயக்கப்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான அளவிற்கு, குறைந்த விலையிலே, அரசால் தரமான மணல் வழங்கப்படும் என்பதை காங்கிரஸ் எதிர்க்கட்சித்தலைவருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேற்று முன் தினமும் பேரவையில் முதல்வர் பேசுகையில், தரமான மணல் குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும் சுட்டிகாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply