BREAKING NEWS

நீதிமன்றங்கள் சுமைதாங்கிகள் அல்ல..!

சாதாரண குற்றத்தில் தொடங்கி மிகப்பெரிய ஊழல் வரை குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில காவல்துறையிலிருந்து மத்திய புலனாய்வுத்துறை வரையுள்ள விசாரணைஅமைப்புகளிடம் வழக்கின் தன்மைக்கேற்ப விசாரணைப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும், ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்தி பணம்சம்பாதித்தவர்களும்  இதில் அடங்குவர். அவர்களுக்கு எதிராக எதிரணியினரால் எழுப்பப்படும் குரலை அமைதிப்படுத்த எடுக்கும் முயற்சியே சி.பி.ஐ போன்ற உயர்மட்ட அமைப்புகளிடம் விசாரணையை ஒப்படைப்பதன் நோக்கம்.

அப்படி ஒப்படைக்கப்பட்ட ஒன்றுதான் 2ஜி அலைக்கற்றை விவகாரம். இது முழுக்கமுழுக்க, அறிவியல் தொழில்நுட்பமும் அரசு நிர்வாக நடைமுறையும் சம்பந்தப்பட்டவிசயம். எனவே, அதில் குற்றம் சுமத்துபவர்கள் இந்த இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது அத்தகைய நிபுணத்துவம் பெற்றவர்களைப்  பின்னணியில் வைத்துக்கொண்டு பேசவேண்டும்.

அனுமானத்தின் அடிப்படையில் அரசியல் ஆதாயத்துக்காகக் கிடைத்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஒருசாரார் மீது குற்றம் சுமத்துவதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு வந்ததும் அதற்கான ஆதாரங்களாக சாட்சிகளையோ ஆவணங்களையோ  விசாரணை அமைப்புகள் முன் ஆஜர்படுத்த தவறுவதும், அந்த விசாரணை அமைப்புகளும், எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் நடுநிலையுடன் தக்க நிபுணர்களின் ஆலோசனையோடு விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரிக்காமல்,  தங்களிடம் நீதிமன்றத்தின் முன் தேவையான மற்றும் போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்து வெற்றிகரமாக வழக்கைநடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனைபெற்றுத்தர முடியும்  என்று உறுதிப்படுத்திக் கொள்ளாமல், யாரோ ஒருசிலரைத்திருப்திப்படுத்துவதற்காக அல்லது வற்புறுத்தலுக்காக   குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்வதும். நீதிபதிகள் அவர்களின் தவறுகளை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டி எதிரிகளை விடுதலை செய்வதும் மிகவும் துரதிருஷ்டமானது.

நீதிமன்றத்திற்கு தேவையான ஆதாரங்களையும், சாட்சிகள் மற்றும் ஆவணங்களையும் சமர்ப்பித்து, இந்த வழக்கில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க இயலாது என்று அந்த விசாரணை ஏஜென்ஸி கருதினால் அரசு வழக்கறிஞரின் கருத்துரை பெற்று வழக்கின் மேல்நடவடிக்கையைக் கைவிட்டு நீதிமன்றத்திற்கு பிரிவு 173 குற்ற நடைமுறை சட்டப்படி அறிக்கை அனுப்பியிருக்கலாம். இந்த வழக்கு மக்களிடம் இவ்வளவு பிரபலமடைந்திருக்காது.எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்காது. சம்பந்தப்பட்டவர்களும் தேவையின்றி அலைக்கழிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். பொதுமக்களின் வரிப்பணமும் இந்த அளவுக்கு வீணாகியிருக்காது.

குற்றம் சுமத்தப்பட்டு சிறைத்தண்டனையையும், பல அவமானங்களையும் சந்தித்தவர்கள், உண்மையிலேயே இந்த ஊழலில் சம்பந்தப்பட்டு லாபமடைந்திருந்து, ஆதாரங்களை மட்டும் திறமையாக அழித்திருந்தால், அவர்கள் பட்ட அவமானங்களையும், சிறைத்தண்டனையையும் பெரிதுபடுத்த வேண்டியதில்லை . உண்மையிலேயே அவர்கள் நிரபராதியாக இருந்தால், அவர்கள் பட்ட இன்னல்களை ஈடுசெய்யமுடியாது.

பலம்வாய்ந்த அரசியல்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும்,மிக உயர்ந்த செல்வாக்கு மற்றும் பணபலத்துடன் கூடியவர்களாக இருந்தாலும்,  இந்த வழக்கை திறமைமிக்க வழக்கறிஞர்கள் துணையுடன் எதிர்கொண்டு வெற்றிபெற்றார்கள். இதுபோன்று பணபலமும் ஆள்பலமும் கொண்டவர்களால் வழக்கு தொடுக்கப்பட்ட அப்பாவி ஏழைகளின் நிலை என்னவாகும் என்று எண்ணிப்பார்க்கவேண்டும்.

‘நான் கோர்ட்டுக்கு போயிடுவேன் ‘,என்று பாதிக்கப்பட்டவர்கள் (Victims)மிரட்டிய காலம் மாறி பாதிப்பைஏற்படுத்தியவர்களும்(Aggressors) அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களும் (Law enforcing agency) ‘கோர்ட்டுக்குப் போ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதற்கு காரணம் இயலாமை. –பணபலத் தையும் அதிகாரபலத்தையும் எதிர்த்து நிற்க இயலாமை. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் அப்படிசொல்வதற்கு, நீதிமன்ற நடைமுறையில் ஏற்படும்  தாமதமும்  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நமது சட்டவிதிமுறை அளிக்கும் வாய்ப்பும்தான் காரணம்.

நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற நியாயமான, தவிர்க்க முடியாத காரணத்துக்காக  வகுக்கப்பட்டுள்ள இயற்கை நீதிக்கொள்கையை(Principle of Natural Justice)தவறாகப்பயன்படுத்தி  தீர்ப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கைதான் காரணம்.

நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அப்படி  சொல்வதற்குத்தான் பல காரணங்கள் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவின்மை, திறமையின்மை காரணமாகப் பொறுப்பைத் தட்டிக்கழிப்பது, சுயலாபத்துக்காக தவறிழைத்தவர்களுக்கு துணைபோவது ஆகியவை.  காரணம் எதுவாக இருந்தாலும் முடிவாக அவதிக்குள்ளாவதும், இழப்பைச் சந்திப்பதும் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

முன்பெல்லாம் கொலைபோன்ற குற்றங்களைச் செய்தவர்கள் உடனடியாகத்  தலைமறைவாகிவிடுவார்கள் அவர்களைப் பிடிப்பது என்பது காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இப்போதெல்லாம் உடனடியாக நாலைந்து பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துவிடுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு தங்கள் மீது பாய இருக்கும் சட்டநடவடிக்கைமீது இருந்த பயம் போய்விட்டது,

பொதுவாகவே மக்கள் மத்தியிலும் குற்றவாளிகள் மனத்திலும்  சட்டம் அளிக்கும் தண்டனை மீதுபயம் இருக்கும் வரையில்தான் குற்றங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். குற்றவாளிகள் மத்தியில் இருந்த அந்த பயத்தைப் போக்கிவிட்டு குற்றங்கள் மலிந்துவிட்டது என்று புலம்புவதில் அர்த்தமில்லை.

நீதிபதிகள் தங்களுக்குள்ள சமூகப் பொறுப்பையும், கடமையையும், காவல்துறையினருக்கு உள்ள நடைமுறைசிரமங்களையும் உணர்ந்து செயல்படுவதால்தான் பலவழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறுகிறார்கள். அதேசமயம் காவல் அதிகாரிகள் நீதிமன்ற அலுவலையும் உத்தரவுகளையும் புறக்கணித்துவிட்டு கண்டனத்துக்கு ஆளாவதும் சிலர் பிடியாணை பிறப்பிக்குமளவுக்கு நீதிபதிகளின் கோபத்துக்கு ஆளாவதும்  நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது.

பலவழிகளில் அரசு அதிகாரிகளின் செயல்திறன் வீணடிக்கப்படுகிறது. பலர் அதைப் பயன்படுத்துவதில்லை. சிலருக்கு அது இல்லவே இல்லை.மீண்டும் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான்.

அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் தங்களுக்கு  உரியகாலத்தில் கிடைக்கவேண்டிய  ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்க வில்லை என்றும் அதற்கு காரணம்  அவர்களுக்கு மேலுள்ள அதிகாரியின் சொந்த விருப்பு வெறுப்பு என்று கூறி,நீதிமன்றத்தை நாடுவது இப்போது அதிகமாகிவிட்டது.

ஒரு அதிகாரி அப்படி செயல்பட்டால் அவருக்கு மேலுள்ள  அதிகாரி பாதிக்கப்பட்ட அதிகாரியையும், பாதிப்புக்கு காரணமான அதிகாரியையும் விசாரித்து உண்மையை அறிந்துகொண்டு தன் மனசாட்சிப்படியும் நியாயப்படியும் செயல்பட்டு பாதிக்கப்பட்டவரின் குறையைத் தீர்க்கலாம்.

ஒருவரின் உத்தியோகம் மற்றும் ஊதிய உயர்வு என்பது அவரின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டவிஷயம். அவரது குடும்ப உறுப்பினரையும் பாதிக்கின்ற விஷயம். ஒருதனிநபரின் விருப்பு வெறுப்பு அதற்கு காரணமாக இருப்பதை  அனுமதிப்பது மனிதாபிமானமற்ற செயல்.

மாறாக சிலர் நமக்கேன் வம்பு, ஒரு கீழ்மட்ட சாதாரண ஊழியருக்காக நாம் ஏன் இன்னொரு உயர் அதிகாரியின் பகைமையை சம்பாதித்துக் கொள்ளவேண்டும்  என்று நினைத்தால் அப்படியே அதை புரட்டிக்கூட பார்க்காமல் தன்உதவியாளர்  விரல் வைத்துக்காட்டும் இடத்தில் அல்லது பென்சிலால் கிராஸ் குறியிட்டுக்காட்டிய இடத்தில்  கையெழுத்துப்  போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.

இன்னும் பல அதிகாரிகள் அதை எழுதிக்கொடுப்பதற்கென்று ஓய்வு பெற்ற அலுவலர்களை சம்பளத்துடன் அமர்த்தியிருப்பார்கள். அவர்கள் இதுபோன்று அடுத்தவர் தப்பிக்காதவகையில் சிக்கவைப்பதில் சிறந்தவர்கள் என்று பெயர் வாங்கியிருப்பார்கள். அவர்கள் எழுதிவைப்பதில் கண்ணைமூடிக்கொன்டு கையெழுத்துப்போட்டுவிட்டுப் போவார்கள். இதை நான் எழுதும்போது இதற்கு உதாரணமாகத்திகழ்ந்த, நான் சந்தித்த அதிகாரிகளின் முகம் என் கண் முன்னால் வந்துபோகிறது.

தங்கள்கீழ் பணியாற்றும் அதிகாரிகள் சொல்வதை அப்படியேகேட்டு அதன் உண்மைத்தன்மையை உள்வாங்கி அப்படியே எழுதிப்பாராட்டி விட்டுப்போகிறவர்களும் இருந்தார்கள். எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் குறையை எழுதி தண்டனைக்கொடுத்தால்தான் தங்கள்மீது பயமும், பக்தியும் ஏற்படும் என்பதில் ஆரம்பித்து தங்களின் சுயலாபத்துக்காக குற்றத்தைத் தேடிப்பிடித்து எழுதுபவர்களும் உண்டு.

இதுபோன்ற திறமையும் தன்னம்பிக்கையும் இல்லாத அதிகாரிகளால்தான் நீதிமன்றங்கள் வழக்குகளால் நிரம்பிவழிகிறது.

அறிக்கை செய்துள்ள அதிகாரியின் குறிப்புரையை, `நான் ஏற்கவில்லை. மறுக்கிறேன்,’ என்று எழுதும்  நல்லெண்ணம் கொண்ட சிறந்த அதிகாரிகள் மிகவும் அரிதாகஇருக்கிறார்கள்.

திறமையின்மையும் பயமும்தான் இதற்கு காரணம். கப்பல் துறைமுகத்திலேயே நங்கூரமிட்டிருந்தால் பாதுகாப்பாகத்தான் இருக்கும் ஆனால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் அதுவல்ல. புயலையும் மழையையும் எதிர்கொண்டு பயணிப்பதில்தான் அதன் உறுதித் தன்மை வெளிப்படும்.

அரசு அதிகாரிகளிடம்,அவர்கள் ஏற்றுள்ள பதவிக்குரிய அலுவல் ரீதியான பொறுப்புணர்வுடன், சமூகப்பொறுப்பும் இருந்தால்தான்,  தான் ஆற்றும் பணியிலும் தன்னை நாடிவரும் பொதுமக்களிடமும் அக்கரையோடும் அரவணைப்போடும் செயல்படுவார்கள். பெரும்பாலான அதிகாரிகள் தன்னை நாடி வருபவர்களின் முகத்தைக்கூட பார்த்து பதிலளிப்பதில்லை. அதன் விளைவுதான் அவர்களை நீதிமன்றத்தை நாடச்செய்கிறது. அவர்களின் சிறுபிரச்சினைகள் பெரிதாக உருவெடுத்து நீதிமன்றங்களை ஆக்கிரமித்து அவற்றின் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு பிரச்சினையின் பகுதியாக இருக்கும் ஒருவரால் அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இயலவில்லை என்றால் அவர்தான் பிரச்சினையே என்பது எத்தனை உண்மையோ அதுபோல  பொறுப்பில் உள்ள ஒருவரிடம் கொடுக்கப்பட்ட பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் திருப்தியடையும் வகையில் அவரால் முடிவெடுக்க முடியவில்லை என்றால், அவரது அணுகுமுறையில், செயல்பாட்டில்,சீர்தூக்கிப்பார்ப்பதில் பாரபட்சம்  தலைதூக்கிவிட்டது என்றுதான் பொருள்.

இப்படி பலர் அவரவர் பங்குக்கு செய்துவைக்கும் தவறுகள் ஒட்டுமொத்தமாக நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து கொட்டப்படும்போது அதில் உண்மையைத்தேடியெடுக்க நீதிமன்றம் அதிக அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமேற்படுகிறது. போலிவழக்கறிஞர்கள் கூட உள்ளே புகுந்து பிழைப்பு நடத்தும் அளவுக்கு வழக்கறிஞர்களின் எண்ணிக்கையும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டேபோகிறது. ஆனாலும் தீர்ப்புகளுக்கு ஏற்படும் தாமதம் மட்டும் குறைந்தபாடில்லை.

ஒரு குற்றவழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி திறமையானவராக இருந்தால், குற்றத்தை நோக்கத்தோடு, முனைப்போடு செய்தவர் யார், முன் விரோதம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்த்து விடப்பட்டிருப்பவர்கள் யார் என்று கண்டு பிடித்துவிட முடியும்.உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கூண்டிலேற்றி விட்டுஅப்பாவிகளை குற்றப்பத்திரிகை(இறுதி அறிக்கை)யில் சேர்க்காமல் விலக்கவும்  நீதிமன்றத்தின் முன் சிறிதும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கவும் முடியும்.

விரோதம் காரணமாக புகாரில் சேர்த்துவிட்டிருப்பது தெரிந்தும் போதியசாட்சிகள் இல்லாவிட்டாலும்,’நமக்கேன் வம்பு,கோர்ட்டுக்கு போய் பார்த்துக்கொள்ளட்டும்’ என்று படகு தள்ளிவிடும் அதிகாரிகள் விசாரணைஅதிகாரி என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவர்கள்.

பலசந்தர்ப்பங்களில், நீதிமன்றம் தலையிடமுடியாத,தலையிட விரும்பாத அரசு விவகாரங்களை  நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து வாங்கிக்கட்டிக்கொள்கிறார்கள்.

நீதியரசர்கள் அரசுஅதிகாரிகளிடம், “நீங்கள் செய்யவேண்டிய வேலைகளை எங்களிடம் தள்ளிவிடுகிறீர்களே, அரசு நிர்வாகத்தைக் கூட நீதிமன்றமா செய்யமுடியும்”என்று கேட்டுவிட்டார்கள்.

நீதிமன்றங்கள் எல்லாம் மக்களின் சுமைகளை இறக்கிவைத்து இளைப்பாறும் சுமைதாங்கிகள் அல்ல. தவறானவர்களிடம் தவறவிட்ட தங்களின் உரிமையைத் திரும்பப்பெற  மக்கள் அணுகக்கூடிய ஒரு நன்னம்பிக்கைமுனை.

அதனை தேவையற்றமுறையில் பயன்படுத்தும் முயற்சியில் அதிகசுமையை ஏற்படுத்தி செயல்திறனைக் குறைத்து, உண்மையானவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயத்தை தாமதமாக்குவதும்  கிடைக்கமுடியாமல் செய்வதும் சமூகவிரோதசெயலுக்கு ஒப்பானதுதான்.

தங்களின் கடமையை மறந்து நீதிமன்றத்தின் கைகாட்டிகள் போல்செயல்படும் அதிகாரிகள் திருந்தவேண்டும் அல்லது திருத்தப்படவேண்டும்.

 

மா.கருணாநிதி, காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு)
Leave a Reply