BREAKING NEWS

‘‘நீங்கள்தான் என்னை வாழவைத்த தெய்வம்..!’’

எம்.ஜி.ஆரிடம் வளர்ந்தவர்… எம்.ஜிஆரால் படிக்க வைக்கப்பட்டவர். அவரோடு மிக நெருக்கமாக இருந்தும் தான் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் , இன்றுவரை திமுகவிலேயே பயணித்துவரும் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவரும் திமுகவின் பொருளாளரும் திமுகவின் மூத்த தலைருமான துரைமுருகன், எம்.ஜி.ஆர் குறித்த நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்…

‘‘எம்.ஜி.ஆர்.  என்மீது கொள்ளைப் பிரியம் கொண்டிருந்தார். கட்சியில் இருந்து பிரிந்த பிறகும்கூட அவருக்கு என்மீது இருந்த பிரியம் துளியும் குறையவில்லை என்பதுதான் எல்லோருக்கும் எனக்கும் ஆச்சரியம். அவர் தி.மு.க-வை விட்டு பிரிந்த பிறகுதான் நான் முதன் முதலாக எம்.எல்.ஏ.,வாக ஆனேன்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் நான், சுப்பு, ரகுமான்கான் மூன்று பேரும்தான் காரசாரமாக விவாதம் பண்ணுவோம். அப்போது, எம்.ஜி.ஆர் முதல்வர் இருக்கையிலிருந்து என்னைப் பார்த்து, “என்னடா கலாட்டா பண்ற” என்று சொல்வதுபோல் விரலை நீட்டி சைகை செய்வார். அடிக்கடி என் மீதான அவர் பார்வை தப்பவே தப்பாது.

ஒருநாள் சபாநாயகர் அறையில் இருந்து வெளியே வரும்போது சட்டென்று என்னைப் பிடித்துக்கொண்டார். “வாடா. என்னடா நீ திருட்டுத்தனம் பண்ற… ராஸ்கல். வா மேலே வா” என்று என் தோளில் கைபோட்டு அவரது அறைக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டார். அங்கே, “என்னைப் படத்தில் பார்த்தவன் எல்லாம் மந்திரியா உக்காந்துக்கிட்டு இருக்கான். நீ என் மடியில் வளர்ந்த மடையன். நீ எப்படி இருக்கணும் தெரியுமா? நான் உட்கார்றேன் இல்ல சீஃப் மினிஸ்டர் சேர், அதுல போய் நீ உட்கார். நான் வர்றேன். டிக்ளேர் பண்றேன். உனக்கு என்ன பொறுப்பு வேணுமோ எடுத்துக்கோ” என்றார்.

உடனே நான், “அண்ணே, உங்க அன்புக்கு நன்றி. நான் அந்த மாதிரி ஆள் இல்ல. நான் கட்சி மாற மாட்டேன்” என்றேன். அவர், “நான் இருக்கற இடத்திலதான் நீ இருக்கணும்” என்றார்.

நானோ, “நீங்க சினிமாவில் நடிக்கும்போது, நான் உங்க படத்தைப் பார்த்து உங்களுக்கு ரசிகனாகி, நீங்க தி.மு.க. நானும் தி.மு.க என்று கட்சியில் சேர்ந்திருந்தால், நீங்க சொல்ற மாதிரி இருக்கலாம். ஆனால் நான் அப்படி இல்லை, அண்ணா திராவிட நாடு கேட்டாரென்று விடுதலை வேட்கையோடு அவரால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தவன். இடையில் உங்களுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது.

உதாரணமாக சொல்லணும் என்றால், சென்ட்ரல் ஸ்டேஷன்ல ஒரு வண்டி நிற்குது. கோயம்புத்தூர் போற வண்டி. அதுல ஏற்கெனவே நீங்க உட்கார்ந்திருக்கீங்க. நான் வந்து உள்ளே ஏறி வர்றேன். ‘வணக்கம்…’ ‘வணக்கம், எங்க போறீங்க.’ ‘கோயம்புத்தூர்.’ அப்படியா என்று சகபயணியா ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே போகிறோம். ஜோலார்பேட்டை வந்தது நீங்கள் இறங்கிட்டீங்க. நான் ஏன் இறங்கணும்? நான் எங்கு இறங்க வேண்டுமோ அங்குதானே இறங்கவேண்டும்? அப்படித்தான் எல்லாம்” என்றேன்.

“சரி, உங்க அப்பா இறந்ததை ஏன் எனக்கு நீ சொல்லவில்லை. நான் அவ்வளவு கெட்டவனாக ஆகிவிட்டேனா?” என்றார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணே,  “எங்கப்பா இறந்து 13-வது நாள்தான் ராணிப்பேட்டையில் தேர்தல். எனக்கு ஓட்டுப்போட வேண்டாம்னு சொல்லி பிரசாரம் பண்ணினீங்களே அது நியாயமா?” என்றேன்.

சிறிது மவுனத்துக்குப் பின்னர், “சரி. அதை விடு‘‘ என்றவர்,  அதன்பிறகு அந்த இறுக்கமான சூழலை மாற்றி கிண்டலடித்து பேச ஆரம்பித்தார். “சரி, நீ முடிவாக என்ன சொல்ற?” என்றார். “என் முடிவு தி.மு.க.,தான். அதிலிருந்து நான் மாறமாட்டேன்” என்றேன். “உனக்கு அந்தக் கட்சியில் ஒரு வெறுப்பே ஏற்படாதா” என்றார்.

“ஏற்படலாம். அப்படி ஒரு கட்டம் வந்து என்னால் தாங்க முடியவில்லை என்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீட்டுக்குப் போய்விடுவேனே தவிர, இன்னொரு கட்சிக்குப் போகமாட்டேன். இன்னொரு கொடிக்கு கீழே என்னை நினைத்துக்கூடப் பார்க்க வேண்டாம். வெய்யிலில் சாலையில் நடந்து போகும்போதுகூட வேறொரு கட்சிக்கொடியின் நிழல்கூட என்மீது படக்கூடாதென்று ஒதுங்கிப்போகிறவன் நான். எனக்கு தி.மு.க.தான் என் கட்சி, கலைஞர்தான் என் தலைவர்.” என்றேன்.

சடார்னு நாற்காலியில் இருந்து எழுந்து என் முன்னால் வந்து, “அப்ப நான்” என்றார் ஆவேசமாக. நான் உடனே அவர் காலில் விழுந்து, “நீங்கதான் என்னை வாழ வைத்த தெய்வம்” என்றேன். என் சட்டையப் பிடித்து தூக்கி நிறுத்தி, கட்டிப்பிடித்து தட்டிக்கொடுத்து, “டேய், நான் உன்னைப் பாராட்டுறேன்டா. அமைச்சர், அந்தஸ்து இதுக்கெல்லாம் ஆசைப்பட்டவன்லாம்கூட இருக்கான். ஆனால், நல்லதோ, கெட்டதோ ஒரே கட்சியில் இருக்கணும்னு என் தம்பி இவ்வளவு உறுதியா இருக்கிறானே என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் எம்.ஜி.ஆர்.

 – ரியாஸ்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *