BREAKING NEWS

நிலம் கையகப்படுத்தும் பணியின் போது விவசாயிகளை போலீசார் கஷ்டப்படுத்தவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

 

 

பசுமை வழிசாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியின் போது அதிகாரிகளின் பாதுகாப்பிற்குதான் போலீசார் போகிறார்கள். விவசாயிகளை கஷ்டப்படுத்தவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

கஷ்டப்படுத்தவில்லை

கேள்வி: பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகளிடம் நிலம் எடுக்கச் செல்லும்போது, 100, 150 போலீஸாருடன் சென்று அடக்குமுறையை கையாள்கிறார்கள் என்று சொல்கிறார்களே?

பதில்: அதிகாரிகள் பணி செய்யும்பொழுது அவர்களுடைய பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்கள். யாரையும் கஷ்டப்படுத்தவும் கிடையாது, இதுவரை, எந்த ஒரு விவசாயியும் வழக்குப் போட்டதும் கிடையாது. இந்தியாவிலேயே இரண்டாவது இந்த பசுமை வழிச்சாலையை நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.

ரூ.25 ஆயிரம் கோடி

அதுமட்டுமல்ல, ரூபாய் 25 ஆயிரம் கோடிக்கு மேல் சாலை விரிவாக்கப் பணிக்காக மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது. 19 சாலைகளை, மாவட்டச் சாலை, மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தி, அகலப்படுத்துவதற்கு அவர்கள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மேலும், 21 சாலைகளை விரிவுபடுத்தி, அகலப்படுத்தி, தரம் உயர்த்த வேண்டுமென்பதற்கு கருத்துரு அனுப்பியிருக்கிறோம். அதையும் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 40 சாலைகள் வரவிருக்கிறது.

சாலை விரிவாக்கம்

தமிழகத்திலிருக்கின்ற அனைத்து சாலைகளையும் விரிவிபடுத்தி, உட்கட்டமைப்பு வசதியைப் பெருக்கினால்தான் புதிய, புதிய தொழிற்சாலைகளை அமைக்கமுடியும். இன்றைக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் படிக்கின்றார்கள். இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் உயர்ந்திருக்கிறது.

புதிய தொழிற்சாலைகள்

தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 21 சதவிகிதமாக இருந்தது. இன்றைக்குத் தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 46.94 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற காரணத்தினால், வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டுமென்று சொன்னால் உட்கட்டமைப்பு மிக முக்கியம். அது இருந்தால்தான், புதிய, புதிய தொழிற்சாலைகளை உருவாக்க முடியும்.

மக்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பைக் கொடுக்க முடியும். படித்த இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை உருவாக்கித் தரமுடியும். அத்தனை பத்திரிகை நண்பர்களும் இதற்காக உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 




Leave a Reply